வழிபாடு

வைகாசி திருவிழா: ஜெனகை மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து வந்த பக்தர்கள்

Update: 2023-05-31 06:03 GMT
  • வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர்.
  • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் கடந்த 22-ந் தேதி வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் இருந்து தினசரி அம்மன்புறப்பாடு நடைபெற்றது. இதில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பால்குடம், அக்னிச்சட்டி எடுக்கும் திருவிழா நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பூஜை செய்து பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். நேர்த்திக் கடனுக்காக உருவபொம்மை, ஆயிரங்கண்பானை, 21 அக்னிச்சட்டி, கரும்பு தொட்டில் குழந்தை எடுத்துவருதல், கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வருதல், அலகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், செயல் அலுவலர் சகாயம்அந்தோணியூசின், சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம், துணைத்தலைவர் லதாகண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கூடுதலாக மின்விளக்கு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி செய்திருந்தனர்.

இதேபோல் முள்ளிப்பள்ளம் ஊராட்சி தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் கேபிள்ராஜா, ஊராட்சி செயலாளர் மனோபாரதி மற்றும் பணியாளர்கள் ஆகியோர் பக்தர்கள் வசதிக்காக வைகை ஆற்றில் இறங்கும் பகுதியில் பாதைகள் அனைத்திலும் சுத்தம் செய்யப்பட்டு கூடுதலாக மின்விளக்கு வசதி செய்துள்ளனர்.

மாலை அம்மன் வைகை ஆற்றுக்கு சென்று அங்கு அபிஷேகம் நடந்தது. இரவு வைகை ஆற்றில் இருந்து பூப்பல்லக்கில் அம்மன் பவனி வந்து கோவிலை வந்தடைந்தது. சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர், என்.சி.சி. மாணவர்கள், சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் பசும்பொன் மற்றும் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், வட்டார சுகாதாரப்பணி ஆய்வாளர் முனியசாமி, சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் மருத்துவ குழுவினர் ஆகியோர் முகாம் அமைத்திருந்தனர். இன்று மாலை மந்தைகளம் மைதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags:    

Similar News