தியாகராஜர் கோவிலின் அறிய தகவல்கள்!
- வன்மீகநாதரை உச்சிகால நேரத்தில் தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும்.
- நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.
திருவாரூர் தியாகராஜர் கோவிலின் சிறப்புகள் எண்ணில் அடங்காதவை. அது குறித்து அறிய, அறிய நம்மிடம் பல ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. அவற்றுள் சில குறிப்பிடத்தக்க சிறப்புகளை இங்கு சுருக்கமாய் காண்போம்.
ராஜேந்திர சோழன் சிலை
தென்கிழக்கு ஆசியாவை கட்டியாண்டவரும், உலகின் மிகப்பெரிய படைக்கு சொந்தக்காரருமாகவும் விளங்கிய ராஜேந்திர சோழனின் உருவச்சிலை திருவாரூர் தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இது இக்கோவிலுக்கு கிடைக்கப்பெற்ற மற்றுமொரு சிறப்பாகும்.
பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்
மகாலட்சுமி, தவம் செய்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்ததும், குழந்தைப்பேறு வேண்டி தவம் செய்து குழந்தைப்பேறு பெற்றதும், இந்த தியாகராஜர் தலமாகும்.
எனவே, குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தியாகராஜரை வழிபாடு செய்தால் குழந்தைப்பேறு கிட்டும், காதலுக்கு தூது போனவர் தியாகராஜர் என்பதால், காதல் கைகூடவும் எவ்வித சிக்கலும் இன்றி திருமணம் நடந்தேறவும் தியாகராஜரை வழிபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கொடுமையான பாவங்கள் செய்தால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க, வன்மீகநாதரை உச்சிகால நேரத்தில் தரிசனம் செய்தால் தோஷம் நீங்க பெறலாம்.
தோல் நோய் குணமாகும்
உடலில் தோன்றும் தோல் நோய், மரு போன்றவை மறைய ஆழித்தேரோட்டத்தின் போது மிளகு, உப்பு, பச்சரிசி, மஞ்சள் பொடி தூவி பக்தர்கள் வழிபடுகின்றனர். இதன் மூலம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் குணமாகும் என்பது நம்பிக்கை.
தீப வடிவில் நவகிரகங்கள்
இத்தலம் நளனும், சனியும் வழிபட்ட தலம். தியாகேசர் சன்னதியின் மேல் வரிசையில் 9 விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். பெருமானுக்கு முன் 6 மற்றும் 5 அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் உள்ளன. இவை ஏகாதச ருத்திரர்களை குறிக்கும்.
சந்தனத்தின் மீது குங்கும பூவையும் பச்சை கற்பூரத்தையும் சேர்த்து, உத்ஸவ வீதிகளில் ஆடிய அசதி தீர, தியாகேசருக்கு மருந்து நிவேதிக்கப்படுகிறது. இது சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது.