வழிபாடு

திருக்குறுங்குடியில் அழகிய நம்பிகள் இன்று ஐந்து கருட சேவை

Published On 2024-03-29 02:30 GMT   |   Update On 2024-03-29 02:31 GMT
  • அழகிய நம்பிராயர், தேவிமார்களுக்கு திருமஞ்சனம், தீபாராதனை.
  • இரவு படியேற்ற சேவை நடைபெறும்.

நெல்லை மாவட்டம் நாங்குனேரி தாலுகாவில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள திருத்தலம் திருக்குறுங்குடி. 1500 வருடம் பழமையான இந்த புண்ணிய க்ஷேத்திரம், 108 திவ்ய தேசங்களில் சிறப்பு வாய்ந்த தாகும். வராஹப் பெருமான் தனது பிரம்மாண்டமான உருவத்தைக் குறுக்கியது இந்த தலத்தில் என்பதால் திருக்குறுங்குடி ஆயிற்று.

வாமன க்ஷேத்திரம் என்ற பெருமை வாய்த்ததால், குறியவன் வசிக்கும் குடில் எனும் அர்த்தம் தொனிக்கக் குறுங்குடி என்று பெயர் பெற்றது. வராஹ மூர்த்தியின் மடியிலிருந்து பூமிப் பிராட்டி கைசிக மஹாத்மியத்தை இத்தலத்தில் உபதேசம் பெற்று, பின் பூவுலகில் ஆண்டாளாக அவதரித்துப் பெருமாளின் பெருமையைப் பரப்பியதால், ஆண்டாளின் அவதார காரணத் தலம் திருக்குறுங்குடி.

நம்மாழ்வாரின் பெற்றோர்களான காரியும், உடைய நங்கையும் இத்தலத்தில் வந்து புத்திர பாக்கியம் வேண்டிப் பிரார்த்தித்ததால், திருக்குறுங்குடி நம்பியின் அம்சமாக நம்மாழ்வார் அவதரித்தார். எனவே இத்தலத்தில், நம்மாழ்வாருக்குத் தனி சன்னதி இல்லை. திருமங்கை ஆழ்வார் பரமபதம் அடைந்த தலமும் இதுவே.

இத்தலத்தில், பெருமான் ஐந்து நிலைகளில் சேவை சாதிக்கிறார். நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி மற்றும் மலை மேல் நம்பி என்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நம்பி கோவிலின் மூலவர், நின்ற திருக்கோலத்தில் உள்ள வடிவழகிய நம்பி. ஒரு முறை பார்த்தவர் திரும்ப திரும்பப் பார்க்க வருவர் என்று சொல்லும் அளவிற்குச் சிவந்த திருமேனியுடன், தாமரையை ஒத்த விசாலமான செவ்வரி ஓடிய கண்களுடன் காட்சி தருகிறார்.

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ விழாவில், இன்று ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடைபெறும். இக்கோயிலில், பங்குனி பிரம்மோற்சவம் தினம் 5-ஆம் திருவிழாவில் காலையில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும். பின்னர், அழகிய நம்பிராயர் மற்றும் தேவிமார்களுக்கு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெறும்.

மாலையில் அழகிய நம்பிராயர், வீற்றிருந்த நம்பி, சயன நம்பி, திருப்பாற் கடல் நம்பி, திருமலை நம்பி ஆகிய 5 சந்நதிகளின் உற்சவர்களும், 5 கருட வாகனங்களில் எழுந்தருளுவர். அலங்காரமாகி, தீபாராதனை, தீர்த்த விநியோகம் நடைபெறும். இரவு 9 மணியளவில், ஒவ்வொரு எம்பெருமானும் ராயகோபுர வாசல் கடந்து படியேற்ற சேவை நடைபெறும். மாடவீதிகள், ரதவீதிகள் வழியாக ஐந்து பெருமாளும் வலம் வருவதைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்.

Tags:    

Similar News