வழிபாடு

எறிபத்தநாயனார் குருபூஜை

Published On 2024-02-27 08:00 IST   |   Update On 2024-02-27 08:01:00 IST
  • கருவூரிலே அவதரித்தார் எறிபத்த நாயனார்.
  • அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

கொங்கு நாட்டிலே உள்ள கருவூரிலே அவதரித்தார் எறிபத்த நாயனார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். முன்னொரு காலத்தில், புகழ் சோழர் என்ற மன்னன் கரூர் மாநகரை ஆண்டுவந்தார். அதேநகரில் சிவகாமி ஆண்டார் என்ற சிவபக்தர் வசித்துவந்தார்.

அவர், நாள்தோறும் அதிகாலையில் எழுந்து, நந்தவனத்திற்குச் சென்று பூக்களைப் பறித்துவந்து, பசுபதீஸ்வரருக்கு சமர்ப்பித்து வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். புரட்டாசி வளர்பிறை அஷ்டமி நாளன்று, நந்தவனத்தில் பூக்களைப் பறித்து, இறைவனுக்குக் கொண்டு செல்லும்போது, சிவகாமி ஆண்டார் முனிவரைப் பட்டத்து யானை கீழே தள்ளி, பூக்குடலையைத் தட்டிவிட்டுச்சென்றது.

இதனால், பூக்கள் எல்லாம் கீழே சிதறியது. அதைப் பார்த்துக் கோபமுற்ற சிவகாமி ஆண்டார், 'சிவ சிவா' என்று கத்தியவாறு சாலையில் விழுந்துகிடந்தார்.

அப்போது, அவ்வழியாக வந்த எறிபத்த நாயனார், நடந்ததைக் கேட்டு, சிவபூஜைக்குத் தடை ஏற்படுத்திய யானையையும் அதன் பாகனையும், தனது கையில் வைத்திருந்த இலைமலிந்த வேலால் வெட்டி வீழ்த்தினார். இதை அறிந்த புகழ் சோழ மன்னன், படைகளுடன் அங்கு வந்து விசாரனை நடத்தினார். அப்போது, எறிபத்த நாயனாரின் மீது எந்தவிதமான தவறும் இல்லை என்றும், பட்டத்து யானையால்தான் தவறு நிகழ்ந்துள்ளது என்றும் அறிந்து, மிகவும் மனம் வருந்தினார்.

'பட்டத்து யானை இந்த நாட்டுக்குச் சொந்தமானதால், நானும் அதற்கு ஒரு காரணம்' என்று தன் தலையைத் துண்டிக்குமாறு தன்னுடைய உடைவாளை உருவி, எறிபத்த நாயனாரிடம் வழங்கினார். அப்போது சிவபெருமான், உமாதேவியுடன் விண்ணில் காட்சியளித்து, 'இறைவனுக்கு பூக்களால் செய்யப்படும் பூஜையின் அருமை குறித்தும், சிவத்தொண்டர்களின் பக்தியை உலகிற்குத் தெரியப்படுத்தும் வகையிலும் நாம் நடத்திய நாடகமே இது' பின்னர், உயிரிழந்த யானை மற்றும் அதன் பாகர்கள் அனைவரும் உயிர்பெற்றனர். எரிபத்தநாயனாரின் குருபூஜை இன்று.

Tags:    

Similar News