வழிபாடு

சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் தரிசன கவுண்ட்டர்களில் காத்திருந்த காட்சி.

திருப்பதி கோவிலில் 40 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2022-08-15 04:21 GMT   |   Update On 2022-08-15 04:21 GMT
  • வரிசைகளில் நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • திருமலையில் குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை வரை நீடிக்கும்

திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். வாரத்தில் 2-வது சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், சுதந்திர தினவிழா விடுமுறை வந்ததாலும் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் நேற்று முன்தினம் அலைமோதியது. அதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடம், பல்வேறு இடங்களில் உள்ள அன்னப்பிரசாத கவுண்ட்டர்கள், நாராயணகிரி தோட்டம் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உணவு, பால் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் திருமலைக்கு விரைந்து வந்து நாராயணகிரி பூங்கா, வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் உள்பட பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், பக்தர்களுக்கு வரிசைகளில் வழங்கப்படும் உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அன்னப்பிரசாதம், சுகாதாரம் மற்றும் பறக்கும்படை பிரிவுகளில் தனிக் கவனம் செலுத்தி, அனைத்து முக்கிய இடங்களிலும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும், என அதிகாரிகளை கேட்டுகொண்டார்.

தரிகொண்டா வெங்கமாம்பா அன்னத்தானக்கூடத்தில் ஓரிரு நாட்ளாக மதிய வேளையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவும், வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு அன்னப்பிரசாதமாக உப்புமா, பொங்கல் ஆகியவை வழங்கப்பட்டது. 2 நாட்களில் வழக்கத்தை விட பக்தர்களுக்கு 2 மடங்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருவதாக, அதிகாரி தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி பச்சிளம் குழந்தைகளுக்கு அவ்வப்போது பால் வழங்கப்பட்டு வருகிறது. வரிசைகளில் நெரிசல் ஏற்படாமல் இருக்க பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று பக்தர்கள் கூட்டம் கோவிலில் இருந்து திருமலையில் உள்ள வெளிவட்டச்சாலை வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் 40 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஏழுமலையான் கோவிலில் 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருமலையில் குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை வரை நீடிக்கும், என திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News