வழிபாடு

திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு 36 மணி நேரமாகிறது: 3 கிலோ மீட்டர் வரிசையில் நிற்கிறார்கள்

Published On 2023-05-18 05:10 GMT   |   Update On 2023-05-18 05:10 GMT
  • வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிகின்றன.
  • ரூ 300 தரிசன டிக்கெட் வரும் 24-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணாமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

இதனால் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிகின்றன. இன்று காலை வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் இருந்து கெங்கையம்மன் கோவில் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

தற்போது திருப்பதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மோர் உள்ளிட்டவைகளை தன்னார்வலர்கள் கொண்டு வழங்கி வருகிறது.

ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 5 மணி நேரமும், நேரம் ஒதுக்கிடு முறையில் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 10 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

நேரடி இலவச தரிசனத்தில் 36 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஏழுமலையின் கோவிலில் இன்று முதல் 20-ந் தேதி வரை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாரதனை, ஆகிய சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவைகள் தொடர்பான டிக்கெட்டுகள் 21-ந் தேதி வெளியிடப்படும். ஸ்ரீவாணி, அங்க பிரதட்சணம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் 23-ந் தேதி வெளியிடப்படுகிறது.

இதேபோல் ரூ 300 தரிசன டிக்கெட் வரும் 24-ந் தேதியும், திருப்பதியில் அறை ஒதுக்கீடு 25-ந் தேதியும், திருமலையில் அறை ஒதுக்கீடு 26-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

இந்த சேவைகளை பக்தர்கள் பயன்படுத்திக்கொண்டு பயனடைமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் நேற்று 79,207 பேர் தரிசனம் செய்தனர். 41,427 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News