weekly rasipalan 7.12.2025 to 13.12.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
- மிதுனம் நினைத்ததை நடத்தி முடிக்கும் வாரம்.
- சிம்மம் நல்ல மாற்றங்களும், வாய்ப்புகளும் தேடி வரும் வாரம்.
மேஷம்
திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் 9-ம் மிடமான பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவருக்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது. வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த பிரச்சினைகள் விலகும். குடும்ப உறவுகளால் ஏற்பட்ட தொல்லைகள் வீண் பழிகள் அகலும். சிலருக்கு புதியதாக ஆயுள் காப்பீடு செய்து கொள்வதில் ஆர்வம் கூடும். சட்ட சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் மேல் வீண் பழிகள் அகலும். அரசாங்க ஊழியர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி கிடைக்கும். ராசி அதிபதி செவ்வாய்க்கு பாதகாதிபதி சனி பார்வை இருப்பதால் பூர்வீகச் சொத்து தொடர்பான விஷயங்களை ஒத்திப் போடுவது நல்லது. மூத்த சகோதரன் சித்தப்பா இவர்களால் சில அசவுகரியங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். காதல் திருமணம் முயற்சி வெற்றி தரும். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுவதால் வல்வினைகள் அகலும்.
ரிஷபம்
தன்னம்பிக்கை நிறைந்த வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ராசிக்கு 7-ம் இடத்தில் சூரியன் மற்றும் புதனுடன் இணைந்து ராசியை பார்க்கிறார். உங்கள் எண்ணங்கள், யோசனைகள் திட்டங்களை செயல்படுத்தக்கூடிய சாதகமான சூழ்நிலை உருவாகும். இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். கடன் தொல்லை இழப்புகள், விரயங்கள் குறையும். தொழிலில் மூலம் மதிப்பு, மரியாதை உயரும். தடைபட்ட வாடகை வருமானம் வரத்துவங்கும். புதிய வீடு, மனை வாங்கும் முயற்சி கைகூடும். சொத்துக்களுக்கு நல்ல வாடகை தாரர்கள் கிடைப்பார்கள். வெளிநாட்டு வேலை முயற்சி நிறைவேறும். பெண்களுக்கு கணவரின் பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும். தாயின் அன்பும் ஆசிர்வாதமும் தாய் வழிச் சொத்தும் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிக்காக வெளியூர், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள நேரும். தந்தை வழிச் சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினை இழுபறியாகும். தொழில் சார்ந்த விசயங்களில் அரசின் சட்ட திட்டங்களை கடைபிடிப்பது நல்லது. குல அல்லது இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட அனைத்தும் சுபமாகவே இருக்கும்.
மிதுனம்
நினைத்ததை நடத்தி முடிக்கும் வாரம். ராசியில் உள்ள வக்ர குருவிற்கு செவ்வாயின் நேரடி பார்வை உள்ளது. தன்னம்பிக்கை அதிகமாகும். தொழிலில் நிரந்தர தன்மை உண்டாகும். திறமையும் செயல் வேகமும் அதிகரிக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட முயல்வீர்கள். பொருளா தாரத்தில் சீரான, சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். புதிய கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும். வெளிநாடு செல்வதற்கான முயற்சி வெற்றியைத் தரும். சிலர் வேலை மாறுதலாகி வேறு இடம் செல்ல வேண்டி வரும். வீடு கட்டும் முயற்சி மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றத்தால் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூர்வீக சொத்து தொடர்பாக சகோதர, சகோதரி வகையில் நிலவிய மன உளைச்சல் அகலும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். வயோதிகர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு நீங்கும். திருமண முயற்சிகள் நிறைவேறும். விரும்பிய வரன் தேடி வரும். அரசியல் பதவியில் இருந்த முட்டுக் கட்டை விலகும். குல தெய்வ அருளுடன் சகல பாக்கியங்கள் நிறைந்த வாரமாக இருக்கும்.
கடகம்
விரயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசியில் வக்கிரம் பெற்று நிற்கும் உச்ச குரு பகவான் வக்ரகதியில் 12-ம் மிடமான விரய ஸ்தானத்திற்கு செல்கிறார். சற்று நிதானமாக செயல்படுவதால் பெரிய நன்மைகளை அடைய முடியும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்க்கவும். தேவையற்ற வெளியூர் பயணங்களையும் வெளி உணவுகளையும் தவிர்த்தல் நலம். பொருளாதாரத்தைப் பொறுத்த வரை இனி இல்லை என்ற நிலை இல்லை. பெற்றோருடன் ஏற்பட்ட மனத் தாங்கல் மாறும். ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் எதிரிகளை பிரமிக்க வைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய்க்கு சனி மற்றும் குரு பார்வை இருப்பதால் மெக்கானிக். இயந்திரப் பணியாளர்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பெரிய தொழில் முதலீடுகள், பங்குச் சந்தை முதலீடுகளைத் தவிர்த்தல் நலம். வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களிடம் நல்லாசி பெற அஷ்டம ராகுவின் தாக்கம் குறைந்து திருமண தடை அகலும்.
சிம்மம்
நல்ல மாற்றங்களும், வாய்ப்புகளும் தேடி வரும் வாரம். முக்கூட்டு கிரகங்களான சூரியன், புதன், சுக்கிரன் ராசிக்கு 4-ம்மிடமான சுகஸ்தானத்தில் சேர்ந்துள்ளார்கள். இதுவரை சுணங்கி கிடந்த யோசனைகள் விறுவிறுப்படையும். கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் நல்ல மாற்றங்கள் வரும். மண்மனை, பூமி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உள்ளது. சொத்துக்களால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு அரசின் சலுகையால் இருப்பிடம் கிடைக்கும். வியாபாரத்தில் தனித்தன்மையுடன் மிளிர்வீர்கள். தொழிலில் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நேரம். சுய ஜாதகரீதியான தசா புத்தி சாதகமாக இருந்தால் நண்பர்கள் அல்லது வாழ்க்கைத் துணையுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் முயற்சியில் ஈடுபடலாம். உடன் வேலை பார்ப்பவர்களால் ஏற்பட்ட கவுரவக் குறைவு அகலும். குடும்ப பிரச்சினைகளை பேசித் தீர்க்க உகந்த காலமாகும். சிலருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டப் பொருள் கிடைக்கலாம். அல்லது பண வரவு அதிகரிக்கும். சுவாமி ஐயப்பனை வழிபட சங்கடங்கள் தீரும்.
கன்னி
தர்மம் தலைகாக்கும் நேரம். ராசி அதிபதி புதன் தனாதிபதி சுக்ரனுடன் சேருவது தர்மகர் மாதிபதி யோகம். மாற்றமும் ஏற்றமும் தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடக்கும். அதிர்ஷ்டம், போட்டி, பந்தயம் போன்றவை உங்களின் வருமானத்தை பெருக்கும். தொழில் போட்டிகளை தாண்டி தனி முத்திரை பதிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த அரசாங்கத் தடைகள் நீங்கும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள். குடும்ப உறவுகளிடம் இணக்கம் உண்டாகும். ஆனால் விரயாதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுவதால் வரவிற்கு மீறிய செலவுகளால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். வாடகை வீட்டுப் பிரச்சினையில் இருந்து விடுபட்டு சொந்தமாக அபார்ட்மென்ட் வாங்கி குடியேறுவீர்கள். உங்கள் மீது வெறுப்பை உமிழ்ந்த உயரதிகாரியின் மனநிலை மாறி ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பங்குதாரர், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்கும். பெண்கள் கணவரின் தொழில், உத்தியோக உயர்வால் நிம்மதி அடைவார்கள். தினமும் அபிராமி அந்தாதி படிப்பதால் கண்டகச் சனியால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
துலாம்
வளர்ச்சிகள் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் சூரியன் மற்றும் புதனுடன் சேர்ந்துள்ளார். சனி பகவான் வக்ர நிவர்த்தியாகிறார். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து இருந்த நல்ல காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தைரியம், தன்நம்பிக்கை அதிகரிக்கும். மிகப்பெரிய வெற்றி கிடைக்கப் போகிறது. உங்களுக்கு இருந்த சிக்கல்கள் நீங்கி நல்ல நேரம் தொடங்கப்போகிறது. திருமணத்தடை அகன்று நல்ல வரன் பற்றிய தகவல் கிடைக்கும். அயல் நாட்டிலிருந்து தாயகம் திரும்ப முடியாமல் இருந்தவர்கள் வீடு திரும்புவார்கள். குடும்பத்தில் காரணமின்றி நடந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தன வரவு மட்டற்ற மகிழ்ச்சி தரும். கடன் தொல்லை குறையும். செவ்வாய்க்கும் சனிக்கும் சம்பந்தம் இருப்பதால் சிலருக்கு தொழில் கூட்டு பிரியும். அல்லது நம்பியவர்களால் ஏமாற்றம், மன வருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் கவனம் தேவை. வரலாற்று புகழ்மிக்க ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். தினமும் லலிதா சகஸ்ர நாமம் படிப்பதால் எண்ணங்கள் ஈடேரும்.
விருச்சிகம்
நம்பிக்கைகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தனம், வாக்கு குடும்பஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்ப ஸ்தானத்திற்கு குரு மற்றும் சனி பார்வை கிடைப்பதால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளுடன் நிலவிய கருத்து வேறுபாடு, கடும் விரோத நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். உங்களின் செயல்பாடுகள் வெற்றியில் முடியும். நல்ல காரியங்கள் நடக்கக்கூடிய அறிகுறிகள் தென்படும். பணத்தட்டுப்பாடு படிப்படியாக குறையும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி அல்லது வராக்கடன்கள் வசூலாகும். பிள்ளைகளால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். தந்தையால் ஏற்பட்ட மன சஞ்சலம் விலகும். பூர்வீகச் சொத்துக்கள் முறையாக பிரிக்கப்படும். புதிய தொழில் முதலீடுகளை மனைவி பெயரில் முதலீடு செய்வது நல்லது. வெளிநாட்டுப் பயணங்கள் வெற்றி பெறும். 7.12.2025 அன்று இரவு 10.38 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் இனம்புரியாத கவலை குழப்பம் உண்டாகலாம். வேலையாட்களால், உடன் பணிபுரி பவர்களால் மன சங்கடம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நவகிரக செவ்வாயை வழிபடலாம்.
தனுசு
திருப்பு முனையான சம்பவங்கள் நடக்கும் வாரம். ராசியில் உள்ள பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய்க்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது. தொழில் வளர்ச்சியில் நிலவிய இடையூறுகள் அகலும். குடும்பத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் வருமானம் வரத்துவங்கும். தொழில் உத்தியோக ரீதியான சில நேர்மறை சம்பவம் ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை. சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது சிறப்பு. சிலருக்கு வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். காதல் திருமணம் கைகூடும். இந்த வாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபடுவதால் வெற்றி நிச்சயம் உண்டாகும். தடைபட்ட திருமணம் நடந்து முடியும். பொறுப்பு மிக்க பதவிகள் தேடி வரும். ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். 7.12.2025 அன்று இரவு 10.38 முதல் 10.12.2025 அன்று அதிகாலை 2.23 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் மாமனார் அல்லது மைத்துனர்கள் வழியில் மனக்கசப்புகள் ஏற்படலாம். உறவுகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும். சிவ வழிபாடு செய்வதன் மூலம் சிறப்பான பலனை அடைய முடியும்.
மகரம்
மாற்றமும் ஏற்றமும் தேடி வரும் வாரம். வக்ர நிவர்த்தி பெற்ற ராசி அதிபதி சனி பகவான் சகாய ஸ்தானத்தில் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எண்ணங்கள் ஈடேறும். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலர் புதிய தொழில் கிளைகள் திறக்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். படித்து முடித்தவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். விரய ஸ்தானத்தை சனி மற்றும் குரு பார்ப்பதால் சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தருவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி பணவரவும் சேமிப்பும் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.10.12.2025 அன்று அதிகாலை 2.23 முதல் 12.12.2025 அன்று பகல் 10.20 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகளில் தடை ஏற்படும். நெருங்கியவர்களிடையே மன வருத்தம் ஏற்படலாம். பண விவகாரங்கள் கவலை தரும். பொறுமையோடு இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட மிகுந்த நன்மைகள் உண்டாகும்.
கும்பம்
நன்மையும், மேன்மையும் உண்டாகும். வாரம். ராசியில் உள்ள ராகுவுக்கு குருவின் வக்கிர பார்வை உள்ளது. தொழில் முன்னேற்றம், உத்தியோக உயர்வு உண்டாகும். தொழில், உத்தியோகத்திற்காக அலைச்சல் மிகுந்த வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செய்ய நேரும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தைத் தேடுபவர்களுக்கு திறமை, முயற்சி, பொறுமை, உழைப்பு ஆகியவற்றால் வெற்றி பெரும் சூட்சமத்தை சனிபகவான் கற்றுக் கொடுப்பார். ஜென்ம ராகுவால் மனதில் அவ்வப்போது தேவையற்ற சில சந்தேகங்களும் கற்பனை பயமும் உண்டாகலாம். சில தம்பதிகள் குறுகிய காலம் தொழில், உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம். சிலரின் காதல் தோல்வியில் முடியும். பல் சீரமைப்பு செய்ய ஏற்ற காலம். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலர் விலை உயர்ந்த பொருளை ஆன்லைனில் வாங்கி ஏமாறுவார்கள். 12.12.2025 அன்று பகல் 10.20-க்கு சந்திராஷ்டம் ஆரம்பிப்பதால் கொடுக்கல், வாங்கலில் ஏமாற்றங்களைச் சந்திக்கலாம். மன உளைச்சலை தவிர்க்க அமைதியை கடைபிடிக்கவும். நவகிரகங்களை வழிபடவும்.
மீனம்
சாதகமான வாரம். 2, 9-ம் அதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் ஜென்மச் சனியால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். எதிரி, போட்டி பொறாமைகளை சமாளிக்கும் திறன் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தை முறையாக திட்டமிட்டு முழுமையாக செயல்படுத்தி வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். உத்தியோகத்தில் நிலவிய இடர்பாடுகள் குறையும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உருவாகும். தொழிலை விரிவுபடுத்த தேவையான கடன் உதவிகள் கிடைக்கும். வீடு மாற்றும் எண்ணம் நிறைவேறும். குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். உயர் கல்வி தொடர்பான முயற்சிகள் வெற்றி தரும். விவசாயிகளுக்கு மழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு பணியாளர்களால் அசவுகரியம் உண்டாகும். பெண்களுக்கு பிறந்த வீட்டு சொத்து உரிய முறையில் வந்து சேரும்.ஸ்ரீ ராமர் வழிபாட்டால் சுப செய்திகள் தேடி வரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406