வழிபாடு

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

Published On 2025-05-10 12:36 IST   |   Update On 2025-05-10 12:36:00 IST
  • கடந்த 5-ந்தேதி ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
  • உற்சவர் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.

சுவாமிமலை:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது.

இத்தலம் நாலாயிர திவ்ய பிரபந்தம் விளைந்த தலமாக கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை 'குடந்தைக் கிடந்தான்' என அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளி உள்ளார். திருவரங்கனின் புகழை கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. கடந்த 5-ந்தேதி ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. இந்த தேர் தமிழகத்திலேயே 3-வது பெரிய தேர் என்ற பெருமை உடையதாகும். முன்னதாக உற்சவர் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் தொடங்கியது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது 4 ரதவீதிகளில் அசைந்தாடியபடி வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். நடமாடும் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு வாகனமும் தேரை பின்தொடர்ந்தவாறு சென்றது. தேரோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கும்பகோணம் மாநகரமே விழாக்கோலம் பூண்டது.

Tags:    

Similar News