வழிபாடு

ஆண்கள், தங்களது உடலில் கத்தி போட்டபடி ஊர்வலமாக சென்ற காட்சி.

புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு 500 ஆண்கள் ஊர்வலமாக வந்து உடலில் கத்தி போடும் நிகழ்ச்சி

Published On 2023-07-28 08:36 IST   |   Update On 2023-07-28 08:36:00 IST
  • ரத்தம் சொட்ட சொட்ட ஊர்வலமாக கோவிலுக்கு சென்ற அம்மனை வழிபட்டனர்.
  • இவ்வாறு வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

புவனகிரியில் 300 ஆண்டுகள் பழமையான சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. தேவாங்கர் சமூகத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாத உற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆடி மாத உற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் காலை 9 மணிக்கு உடலில் கத்தி போடும் நிகழ்ச்சி தொடங்கியது.

புவனகிரி வெள்ளாற்றில் இருந்து கலசத்தில் புனிதநீர் எடுத்து, அதனை யானையின் மேல் வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், உடலில் கத்தியால் வெட்டிக்கொண்டனர். கத்தி பட்ட இடங்களில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. ரத்தம் சொட்ட சொட்ட ஊர்வலமாக கோவிலுக்கு சென்ற அம்மனை வழிபட்டனர். இவ்வாறு வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

அங்கு புனிதநீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News