வழிபாடு

அஜா ஏகாதசி வழிபாட்டின் பயன்

Published On 2023-10-10 05:19 GMT   |   Update On 2023-10-10 05:19 GMT
  • புரட்டாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியே அஜா ஏகாதசி.
  • திருமாலின் திருநாமங்களைச் சொல்லி வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.

புரட்டாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை அஜா ஏகாதசி என்று சொல்வார்கள். நம்மில் பலரும் காரணம் இல்லாமல் துன்பங்களை அனுபவிப்பார்கள். மனக்கவலைகளுக்கு ஆளாவார்கள், அலுவலகங்களில் பல பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். இவற்றுக்குக் காரணம் நாம் முன் ஜென்மங்களில் செய்த பாவங்களே ஆகும்.

என்னதான் நாம் இந்த ஜென்மத்தில் இறைவனை மனதார தியானித்து நல்லனவற்றையே பேசி, செய்து வந்தாலும் நமக்கு காரணம் இல்லாமல் ஏன் குழப்பங்களும் கஷ்டங்களும் வருகின்றன? அதற்கு காரணம் முன்வினைப்பயன். அதை சீராக்குவதுதான் அஜா ஏகாதசி விரதம்.

இதற்கு ஆதாரமாக புராணக் கதை இருக்கிறது. இது பலருக்கும் தெரிந்த கதைதான்.

அரசனாக வாழ்ந்த அரிச்சந்திரன் ஒரு கட்டத்தில் வாழ்க்கையை இழந்து, அரசப் பதவியை இழந்து காட்டில் கஷ்டப்பட்டான். அது மட்டுமா? காசுக்காக மனைவியை அடிமையாக விற்றான். கடுகாட்டில் பிணங்களை எரித்துப் பிழைத்தான்.

அந்த சூழ்நிலையில் கவுதம முனிவர் அவனைச் சந்தித்தார். விசுவாமித்திரர் அரிச்சந்திரனை பரீட்சிக்கிறார் என்றாலும் அவனது இந்த துன்பங்களுக்குக் காரணம் அவன் முற்பிறவியில் செய்த பாவங்களே. அவைதான் விசுவாமித்திர முனிவருக்கு இத்தகைய எண்ணங்களை உருவாக்கின என்று ஞான திருஷ்டியில் அறிந்தார்.

அரிச்சந்திரனை அழைத்து புரட்டாசி மாதத்தில் வரும் அஜா ஏகாதசி விரதத்தைப் பற்றி விவரித்தார். `மன்னனே நீ இந்த விரதத்தைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் உனக்கு நன்மை கிடைக்கும்' என்றார்.

அரிச்சந்திரனும் 9 ஆண்டுகள் தொடர்ந்து அஜா ஏகாதசி விரதத்தை அனுசரித்தான். அதன் பலனாக விசுவாமித்திரர் வைத்த பரீட்சையில் வென்றான். அது மட்டுமா? அவனுக்கு மும்மூர்த்திகளின் தரிசனமும் கிடைத்தது. மீண்டும் நாட்டை பெற்றதோடு உலகில் அழியாப் புகழோடு வாழ்ந்தான்.

நமது முன்ஜென்ம பாவங்களை நீக்கி இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அளிக்கக்கூடியது அஜா ஏகாதசி விரதம். மற்ற ஏகாதசி விரதங்களைப் போலவேதான் இதையும் அனுசரிக்க வேண்டும். திருமாலின் திருநாமங்களைச் சொல்லி வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.

குறைந்தது பத்து நிமிடங்களாவது கண் மூடி அமர்ந்து பெருமாளை தியானித்து என் முன் ஜென்ம தகாத வினைப் பலன்களை அழிப்பாய் ஐயனே என்று வேண்ட வேண்டும். இரவில் விஷ்ணு புராணத்தை படிக்கலாம். நாம ஜபம் செய்யலாம். மறுநாள் காலை நீராடி பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி தீர்த்தத்தை அருந்தி பின்னர் உணவு உண்ண வேண்டும். அப்படி செய்தால் முன்ஜென்ம பாவங்கள் யாவும் நீங்கி நலம் பெறலாம்.

Tags:    

Similar News