வழிபாடு

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்

Published On 2022-07-23 09:23 IST   |   Update On 2022-07-23 09:23:00 IST
  • 25-ந்தேதி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது.
  • 31-ந்தேதி காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த கொடிமரத்துக்கு காலை 7 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது.

விழாவின் 4-ம் திருநாளான வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 12 மணியளவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. அன்று இரவு அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது.

வருகிற 31-ந் தேதி 10-வது நாள் திருவிழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.

இதைத்தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயிறை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

Tags:    

Similar News