வழிபாடு
குதிரை முகத்துடன் நந்தியம்பெருமான்

குதிரை முகத்துடன் நந்தியம்பெருமான்

Published On 2022-05-25 07:03 GMT   |   Update On 2022-05-25 07:03 GMT
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, முறப்பநாடு என்ற ஊர்.
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, முறப்பநாடு என்ற ஊர். இங்கு கயிலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இது தென்பகுதியில் உள்ள நவ கயிலாயத் தலங்களில் ஒன்றாகும். அதோடு, இந்த ஆலயம் நவக்கிரகங்களில் குரு பகவானுக்குரிய தலமாகவும் விளங்குகிறது.

இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானையும், நந்தியம்பெருமானையும் வழிபாடு செய்வது மிகுந்த நன்மையை அளிக்கும். முருகப்பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட சூரபதுமன் வழியில் வந்த அசுரன் ஒருவன், முனிவர்களுக்கு பெருந்தொல்லை கொடுத்து வந்தான்.

அவனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி, முனிவர்கள் பலரும் இத்தல இறைவனின் முன்பாக முறைப்படி நின்று முறையிட்டனர். அதன்பேரில் சிவபெருமான் முனிவர்களுக்கு அருள்புரிந்தார். இதனால் இத்தலம் ‘முறைப்படு நாடு’ என்று வழங்கப்பட்டு, பின்னர் ‘முறப்பநாடு’ என்றானது.

இந்தப் பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன், தனக்கு குதிரை முகத்தோடு பிறந்த பெண் குழந்தையின் நிலையைக் கண்டு கவலை கொண்டான். பல திருக்கோவில்களுக்குச் சென்று வழிபட்ட மன்னன், தன் மகளோடு இந்த ஆலயத்திற்கு வந்து, தட்சிண கங்கை தீர்த்தத்தில் நீராடினான்.

அப்போது குதிரை முகம் நீங்கி, அழகான முகத்தை அந்தப் பெண் குழந்தை பெற்றது. இத்தலத்தில் உள்ள நந்தியம்பெருமான், அந்தக் குழந்தையின் குதிரை முகத்தை தான் ஏற்றுக்கொண்டதாக தல வரலாறு சொல்கிறது. எனவேதான் இத்தலத்தில் சிவபெருமானுக்கு எதிரே உள்ள நந்தி சிலை, குதிரை முகத்துடன் காணப்படுகிறது.
Tags:    

Similar News