வழிபாடு
சபரிமலை

சபரிமலை கோவிலில் பங்குனி ஆராட்டு திருவிழா 9-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-02-21 11:07 IST   |   Update On 2022-02-21 11:07:00 IST
பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்தமாதம் 8-ந்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக கடந்த 12-ந் தேதி திறக்கப்பட்டது. 13-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. 5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது.

இந்த நிலையில், பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்தமாதம் 8-ந்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

மறு நாள் 9-ந் தேதி ஆராட்டு திருவிழா தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருவிழா கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றிவைக்கிறார். இதையொட்டி 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தினமும் ஸ்ரீபூதபலி, உத்சவபலி ஆகியவை நடைபெறும். 17-ந் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும்.

18-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். அதைத்தொடர்ந்து, 19-ந் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.

பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிப்பது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் தெரிவித்துள்ளார்.

Similar News