வழிபாடு
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம்

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம்

Published On 2022-01-28 06:01 GMT   |   Update On 2022-01-28 06:01 GMT
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் மணவாளநல்லூரில் சித்திவிநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை, மற்றும் பங்குனி உத்திரம், வசந்த உற்சவம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் இக்கோவிலில் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டி கோரிக்கை மனு எழுதி அங்குள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால் 90 நாட்களில் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

இதனால் இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும், வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் அதிகளவு வந்து செல்வார்கள்.

இந்நிலையில் இந்த கோவிலின் வளாகத்தில் அமைந்துள்ள பழுதடைந்த கொடிமரத்தை மாற்ற கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. பழைய கொடிமரம் அகற்றப்பட்ட நிலையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கொடிமரத்திற்கான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்டு சிவ மந்திரங்களை ஓதி மகா தீபாரதனையுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கொடிமரத்தின் உச்சியில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி வழிப்பட்டனர். இதில் உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாலா, ஊராட்சி மன்ற தலைவர் நீதிராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News