வழிபாடு
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில் தெப்பத்திருவிழா நடந்தபோது எடுத்த படம்.

குற்றாலம்- ஆழ்வார்குறிச்சி கோவில்களில் தெப்பத் திருவிழா

Published On 2022-01-21 08:43 GMT   |   Update On 2022-01-21 08:43 GMT
குற்றாலம், ஆழ்வார்குறிச்சி கோவில்களில் தெப்பத் திருவிழா நடந்தது. தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமிகள் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் திருவோண நட்சத்திர நாளில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலின் துணை கோவிலான சித்திரசபை முன்புள்ள தெப்பக்குளத்தில் நேற்று மாலை தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாலை 5 மணிக்கு சித்திரசபையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப சப்பரத்தில் குற்றாலநாத சுவாமி, குழல்வாய் மொழியம்மை, இலஞ்சி குமரன், விநாயகர் ஆகிய சுவாமிகள் எழுந்தருளினர். மாலை 6 மணிக்கு தெப்ப உற்சவம் தொடங்கியது. தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமிகள் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதலில் பக்தர்களுக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. பின்னர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் குறைவான பக்தர்கள் தெப்பத்திருவிழாவில் பங்கேற்க அனுமதித்தனர்.

மேலும் இரவில் பக்தர்கள் கூட்டம் வருவதை தவிர்க்கும் வகையில் சற்று முன்னதாகவே விழாவை நடத்தி முடித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கர், உதவி ஆணையர் கண்ணதாசன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

ஆழ்வார்குறிச்சி சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோவிலில் 28-வது ஆண்டு தெப்பத்திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விழாவின் சிகர நாளான நேற்று முன்தினம் வெள்ளி சப்பரத்தில் தெப்பக்குள விநாயகர் கோவிலில் எழுந்தருளிய சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாள் கேடயத்தில் எழுந்தருளி, தருமபுர ஆதீன மடத்தில் இறங்குதலும், உச்சிகால அபிஷேகமும் நடந்தது.

இரவில் சுவாமி-அம்பாள் கேடயத்தில் தெப்பத்துக்கு எழுந்தருளினர். தொடர்ந்து தெப்பத்தில் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
Tags:    

Similar News