வழிபாடு
தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம்

Published On 2022-01-18 06:44 GMT   |   Update On 2022-01-18 06:44 GMT
காலை 9 மணிக்கு முதலில் சிறிய தேரோட்டம் நடந்தது. இதனை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். அதன்பின்னர் பெரிய தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தென் மாவட்டங்களில் உள்ள சிவ ஆலயங்களில் பழமையானது நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் ஆகும். இந்த கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வழக்கமாக 9-ம் திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறும். அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று காலை பா.ஜனதா மற்றும் இந்து முன்னணியினர் கோவில் முன்பு திரண்டு கஞ்சி காய்ச்சும் போராட்டம், சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் அதிகாரிகள் இன்று தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கினர்.

மேலும் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களிலும் 200 பேர் மட்டுமே இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர். இதையடுத்து கோவில் தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் தேரோட்டத்திற்கு தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் கோவில் தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், தேர் திருப்பணிக்குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், உவரி பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜன் கிருபாநிதி, நெல்லை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் விக்னேஷ், கோட்ட செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டனர்.

காலை 9 மணிக்கு முதலில் சிறிய தேரோட்டம் நடந்தது. இதனை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். அதன்பின்னர் பெரிய தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

முன்னதாக பெரிய தேரில் சுவாமி சந்திரசேகர்- மனோன்மணியம்பிகை ஆகியோர் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையொட்டி கோவில் மற்றும் அதனை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News