வழிபாடு
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை

கைலாசகிரிமலையில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கிரிவலம்

Published On 2022-01-17 07:22 GMT   |   Update On 2022-01-17 07:22 GMT
உற்சவ மூர்த்திகளான ஞானப்பிரசுனாம்பிகை தாயார், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு சிறப்புப்பூஜைகள் செய்து, 2 தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி ஊர்வலமாக புறப்பட்டு கைலாசகிரி மலையில் கிரிவலம் சென்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி பண்டிகைக்கு (பொங்கல்) மறுநாள் மாட்டுப்பொங்கல் அன்று கைலாசகிரி மலையில் சிவன்-அம்பாள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.

அதேபோல் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடக்கும் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின்போதும் சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவத்தன்று கைலாசகிரி மலையில் சிவன்-அம்பாள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடக்கும்.

அதில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வாகனங்களில் எழுந்தருளி மங்கல வாத்தியங்கள் இசைக்க கைலாசகிரி மலையை அடைந்து கிரிவலம் சென்று, அங்கிருந்து திரும்ப புறப்பட்டு கோவிலுக்கு வருவார்கள். உற்சவர்கள் கிரிவலம் செல்லும்போது ஆயிரக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் செல்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலால் ஆந்திர மாநில அறநிலையத்துறை ஸ்ரீகாளஹஸ்தியில் கைலாசகிரி மலை கிரிவல நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்றும், நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதுகுறித்து ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன் ரெட்டி மாநில அறநிலையத்துறை ஆணையாளருடன் தொடர்பு கொண்டு பேசி, கைலாசகிரி மலையில் உற்சவர்கள் கிரிவல நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தார்.

அதன்பேரில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து நேற்று காலை கைலாசகிரி மலையில் கிரிவல நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து உற்சவ மூர்த்திகளான ஞானப்பிரசுனாம்பிகை தாயார், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு சிறப்புப்பூஜைகள் செய்து, பிரத்யேக மலர் அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர்கள் 2 தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி ஊர்வலமாக புறப்பட்டு கைலாசகிரி மலையில் கிரிவலம் சென்றனர்.

அதில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்திராஜு மற்றும் அதிகாரிகள், திரளான பக்தர்கள் பங்கேற்று கிரிவலம் சென்றனர்

வழியில் ராமாபுரம் நீர்த்தேக்கம் அருகில் உள்ள அஞ்சூர் மண்டலத்தில் சிவனுக்கும், அம்பாளுக்கும் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கிரிவலம் சென்று திரும்பிய உற்சவர்களுக்கு சிவன் கோவில் அருகில் உள்ள எதிர்சேவா மண்டபம் அருகில் சிறப்புப்பூஜைகள் செய்து, கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர்.
Tags:    

Similar News