வழிபாடு
பழனி முருகன் கோவில் வெளிப்பிரகாரத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

Published On 2022-01-11 04:06 GMT   |   Update On 2022-01-11 04:06 GMT
பக்தர்கள் வருகையால் கோவில் வெளிப்பிரகாரம், படிப்பாதை, கிரிவீதி, நுழைவு பகுதியான குடமுழுக்கு அரங்கம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது.
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் (வெள்ளி, சனி, ஞாயிறு) வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு தரிசன தடை, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவை அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 3 நாட்களாக பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே பழனிக்கு வந்த பாதயாத்திரை பக்தர்கள் பாதவிநாயகர் கோவில் முன் தரிசனம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். ஒருசில பக்தர்கள் நேற்று தரிசனம் செய்வதற்காக அடிவார பகுதியில் அறை எடுத்து தங்கினர்.

இதையடுத்து 3 நாள் தரிசன தடைக்கு பிறகு நேற்று காலை பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிகாலை முதலே பழனி அடிவாரம், கிரிவீதிகளில் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். கோவில் திறந்ததும் பக்தர்கள், முருகனுக்கு அரோகரா...கந்தனுக்கு அரோகரா...என சரணம் கோஷம் முழங்கியபடி பக்தி பரவசத்துடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகையால் கோவில் வெளிப்பிரகாரம், படிப்பாதை, கிரிவீதி, நுழைவு பகுதியான குடமுழுக்கு அரங்கம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது. திருவிழா போல் பக்தர்கள் குவிந்ததால் பழனி முருகன் கோவில் அடிவார பகுதி ஸ்தம்பித்தது. இதடையே பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

எனவே பஸ்நிலையத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.மேலும் மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப்கார், மின்இழுவை ரெயில் மற்றும் பொது, கட்டண தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் சுமார் 4 மணி நேர காத்திருப்புக்கு பின்னரே சாமி தரிசனம் செய்ய முடிந்தது. கூட்டம் காரணமாக பழனி முருகன் கோவில், அடிவார பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க திண்டுக்கல், தாராபுரம் பகுதிகளில் இருந்து தனியாக நடைபாதை அமைக்கப்பட்டது. தற்போது தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இந்த பாதைகளில் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் பாதயாத்திரை நடைபாதையில் செடிகள் வளர்ந்தும், மண் மேவியும் காணப்பட்டது. இதையடுத்து அதை சீரமைக்க கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று பாதயாத்திரை நடைபாதையை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. பழனி அருகே ஆயக்குடி பகுதியில் சுத்தப்படுத்தும் பணியை கோவில் இணை ஆணையர் நடராஜன், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Tags:    

Similar News