வழிபாடு
சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டம் நடத்த தடை

Published On 2021-12-18 03:26 GMT   |   Update On 2021-12-18 03:26 GMT
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது.
சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த திருவிழா குறித்து ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொடியேற்றம், ஆருத்ரா தரிசன விழா உள்ளிட்டவற்றில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டது. மேலும் தேரோட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் தினந்தோறும் சாமி வீதி உலாவும், 5-ம் நாள் உற்சவமான தெருவடைச்சான் உற்சவமும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதிலும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடராஜர் கோவில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் ரவி தலைமை தாங்கினார்.

இதில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தாசில்தார்ஆனந்த், ஆணையாளர் அஜிதா பர்வீன் மற்றும் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நடராஜர் கோவிலில் தேர்திருவிழா ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் ஆயிரக்கால் மண்டபத்தில் நடராஜ பெருமானும், சிவகாமசுந்தரி அம்மனும் வைக்கப்பட்டு, அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்.

அதே போல் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. ஆனால் தரிசனம் முடிந்த பிறகு மாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்ய கீழ சன்னதி வழியாக, அனுமதிக்கப்படுவார்கள் என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இதற்கான உத்தரவை கோட்டாட்சியர் ரவி பிறப்பித்தார்.

Tags:    

Similar News