வழிபாடு
திருப்பதி

கார்த்திகை துவாதசியையொட்டி திருப்பதியில் நாளை சக்கர தீர்த்தம் முக்கோட்டி

Published On 2021-12-14 05:38 GMT   |   Update On 2021-12-14 05:38 GMT
ஸ்கந்த புராணத்தின் படி பத்மநாப மகரிஷி என்னும் முனிவர் சக்கர தீர்த்தத்தில் 12 ஆண்டுகள் தவமிருந்தார். இந்த தவத்தின் பலனாக சங்கு சக்கரம் கதையுடன் மகாவிஷ்ணு அவருக்கு அருள்பாலித்தார்.
திருமலை

திருப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் துவாதசி அன்று சக்கரதீர்த்த முக்கோட்டி நடைபெறுவது வழக்கம்.

கைசிக துவாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து அர்ச்சகர்கள், பக்தர்கள் மற்றும் அதிகாரிகள் நாளை (புதன்கிழமை) காலை மேளதாளங்கள் முழங்க கோவிலில் இருந்து நாராயணகிரி மலையில் உள்ள சக்கர தீர்த்தத்திற்கு ஊர்வலமாக செல்ல உள்ளனர்.

அங்கு சுயம்புவாக இருக்கக்கூடிய சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், நரசிம்ம சாமிக்கு அர்ச்சகர்கள் பால், சந்தனம், மஞ்சள், தேன் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர்.

ஸ்கந்த புராணத்தின் படி பத்மநாப மகரிஷி என்னும் முனிவர் சக்கர தீர்த்தத்தில் 12 ஆண்டுகள் தவமிருந்தார். இந்த தவத்தின் பலனாக சங்கு சக்கரம் கதையுடன் மகாவிஷ்ணு அவருக்கு அருள்பாலித்தார்.

பின்னர் தனக்கு தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும் என கூறி மறைந்து விட்டார். தொடர்ந்து பத்மநாப மகரிஷி தவம் இருந்து வந்த நிலையில் ராட்சசன் ஒருவர் பத்மநாப மகரிஷியுன் தவத்தை கலைக்கும் விதமாக ஈடுபட்டார்.

அப்போது மகாவிஷ்ணு தனது சக்கரத்தை அனுப்பி அந்த ராட்சசனை வதம் செய்து பத்மநாப மகரிஷியை காப்பாற்றினார். அப்போது மகாவிஷ்ணு வரக்கூடிய பக்தர்களுக்கு சுதர்சன சக்கரம் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து சுதர்சன சக்கரத்தை நாராயணகிரி மலையில் இருக்கும் விதமாக செய்தார். அப்போது முதல் இந்த பகுதி சக்கர தீர்த்தம் என பெயர் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

திருப்பதியில் நேற்று 33,775 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 17,045 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ. 2.89 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News