ஆன்மிகம்
பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி சீட்டு பெற நீண்ட வரிசையில் காத்திருந்தபோது எடுத்த படம்.

கார்த்திகை தீபத் திருவிழா: சாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் நின்று அனுமதி சீட்டு பெற்ற உள்ளூர் பக்தர்கள்

Published On 2021-11-08 08:40 IST   |   Update On 2021-11-08 08:40:00 IST
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் நின்று உள்ளூர் பக்தர்கள் அனுமதி சீட்டு பெற்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவை முன்னிட்டு நேற்று எல்லை தெய்வங்கள் உற்சவ நிகழச்சிகள் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று இரவு திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கொடியேற்றத்தன்றும், 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளதால் அந்த நாட்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

மேலும் 17-ந் தேதி (புதன்கிழமை) மதியம் 1 மணி முதல் 20-ந் தேதி (சனிக்கிழமை) வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. இதனை தவிர்த்து மற்ற விழா நாட்களில் தினமும் உள்ளூர் பக்தர்கள் 3 ஆயிரம் பேரும், வெளியூர் பக்தர்கள் 10 ஆயிரம் பேரும் சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி சீட்டு பெறுவதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய 4 அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த அலுவலகங்களில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி சீட்டு வழங்கும் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகலை வழங்கி அனுமதி சீட்டு பெற்று சென்றனர்.

தொடர்ந்து இன்றும் (திங்கட்கிழமை) மேற்கண்ட 4 அலுவலகங்களிலும் அனுமதி சீட்டு வழங்கும் பணி நடைபெற உள்ளது. அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News