ஆன்மிகம்
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில்

திருக்கோஷ்டியூர், அரியக்குடி கோவில்களில் இன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Published On 2021-09-18 06:24 GMT   |   Update On 2021-09-18 06:24 GMT
புரட்டாசி சனிக்கிழமையொட்டி திருக்கோஷ்டியூர், அரியக்குடி உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் இன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் வரும் புரட்டாசி சனிக்கிழமை என்பது பெருமாளுக்கு உகந்த நாளாக உள்ளதால் அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அச்சமயம் கோவில்களில் கூட்டம் அதிகளவில் காணப்படும். மேலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியும், சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெறும்.

முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்படும். சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் உள்ள சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில் மற்றும் காரைக்குடி அருகே அரியக்குடியில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட திருவேங்கடமுடையான் கோவில், திருப்பத்தூர் அருகே கொங்கரத்தில் உள்ள வண்புகழ் நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமைகளில் அதிகளவில் கூட்டம் காணப்படும். மேலும் அன்றைய தினங்களில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.

இந்நிலையில் தற்போது கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் வாரந்தோறும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை தினமாக உள்ளதால் திருக்கோஷ்டியூர், அரியக்குடி உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருக்கோஷ்டியூர் மற்றும் அரியக்குடி கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:-

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படியும் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் வாரந்தோறும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. அந்த விதிமுறைகளையும் இன்றும் கடைப்பிடிக்கப்பட உள்ளதால் பல்வேறு இடங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் வீட்டில் இருந்தபடியே பெருமாளை நினைத்து வழிபாடு செய்து வணங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News