ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரம் குறைப்பு

Published On 2021-05-03 14:13 IST   |   Update On 2021-05-03 14:13:00 IST
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த சில நாட்களாக காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பாக அனுமதிக்கப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி

கொரோனா பரவலால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான 25 அறைகளை கொண்ட விடுதி கட்டிடம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு கூறியதாவது:-

ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த சில நாட்களாக காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பாக அனுமதிக்கப்பட்டது.

தற்போது பக்தர்களின் நலன் கருதி நாளையில் (திங்கட்கிழமை) இருந்து காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அந்த நேரத்தில் கோவிலில் நடக்கும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜைகள் தவிர மற்ற எந்த ஆர்ஜித சேவைகளும் நடக்காது.

மேலும் ஆந்திர மாநில அறநிலையத்துறை அறிவுரையின்பேரில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சொந்தமான விடுதி கட்டிடம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

அந்த விடுதியில் 25 அறைகள் உள்ளன. அங்கு டாக்டர்கள், நர்சுகள் பணியில் இருப்பார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கோவில் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து மருந்துகள், உணவுப் பொருட்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News