ஆன்மிகம்
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அம்மையப்பர் சாமி படத்தை வைத்து பூஜை

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அம்மையப்பர் சாமி படத்தை வைத்து பூஜை

Published On 2021-03-26 02:47 GMT   |   Update On 2021-03-26 16:41 GMT
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அம்மையப்பர் சாமி படத்தை வைத்து பூஜை செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இது விநாயகப் பெருமான் முருகனை வணங்கும் தலம் என்ற சிறப்பு உண்டு. இங்கு நாட்டில் வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பாக ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது.

சுப்பிரமணிய சாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சுவாமியிடம் பூபோட்டு கேட்பார்கள். அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. இதற்கு முன்பு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் சைக்கிள், துப்பாக்கி தோட்டா, மண், தண்ணீர் வைத்து பூஜிக்கப்பட்டது. இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள் ஏதாவது ஒருவகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.

இந்த நிலையில், காங்கேயம் தாலுகா முத்தூர் அருகே உள்ள வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எஸ்.கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் முருகன் தோன்றி கைலாய மலையில் அம்மையப்பருடன் விநாயகரும், முருகரும் இருப்பது போன்றும், இருபக்கவாட்டிலும் அகோர வீர பத்ரர், ஒரு தெய்வ ஜாதகம், ஒரு திருமாங்கல்யம், ரூ.32 மதிப்புள்ள நாணயங்கள் வைத்து பூஜிக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து அந்த பக்தர் கோவிலுக்கு வந்து, ஆண்டவன் தனது கனவில் வந்து உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்க கூடிய படம் குறித்து கூறினார். இதையடுத்து சாமியிடம் உத்தரவு பெற்று, அந்த பக்தர் கூறிய சாமி படத்தை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இது குறித்து பக்தர்கள் தரப்பில் கூறியதாவது:-

தற்போது உலகத்தில் அன்பு, அறம், சத்யம் ஆகிய மூன்றும் குறைந்து விட்டது. இந்த மூன்றையும் சாமி மீட்கப்போவதாகவும், மேலும் திருமண சுபகாரியங்கள் கைகூடும். திருமண தடை அகலும். சுபகாரிய நிகழ்ச்சிகள் அதிகமாக நடக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்களுக்கு நிறைவானதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி முதல் மக்காச்சோளம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.
Tags:    

Similar News