ஆன்மிகம்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட புதிய கொடிமரம்

Published On 2019-04-12 07:04 GMT   |   Update On 2019-04-12 07:04 GMT
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட புதிய கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்த திருவானைக்காவலில் பிரசித்தி பெற்ற ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னரும் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில் அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி எதிரே பல ஆண்டுகளாக தாமிர தகடுடன் கூடிய கொடிமரம் இருந்தது. அதற்கு மாற்றாக தங்க முலாம் பூசப்பட்ட புதிய கொடிமரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கொடிமரத்தில் முலாம் பூசப்பட்ட தங்க தகட்டை பதிக்கும் பணி நகை சரிபார்ப்பு உதவி ஆணையர் சுரேஷ் முன்னிலையில், கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா மேற்பார்வையில் நடை பெற்றது.

26 அடி உயரமுள்ள இந்த கொடிமரத்தில் 140 கிலோ செம்புத்தகடு, 100 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு ரூ.5 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டது. கொடிமரத்தின் கிழக்கில் அகிலாண்டேஸ்வரி உருவமும், மேற்கில் விநாயகர், வடக்கில் துர்க்கை, தெற்கில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் உருவமும் பதிக்கப்பட்டுள்ளது.

கொடிமரத்தின் பிரம்மபாதம் 5 அடியும், விஷ்ணு பாதம் 3 அடியும் அழகிய வேலைப்பாடுகளுடன் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தின் நடுவே வரகுதானியம் நிரப்பப்பட்டு, பொருத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News