ஆன்மிகம்
தீமிதி விழாவில் பெண்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தியதை படத்தில் காணலாம்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2019-03-11 03:36 GMT   |   Update On 2019-03-11 03:36 GMT
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா 13 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான மாசிப்பெருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

6-ந் தேதி மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதையடுத்து 7-ந் தேதி தங்க பல்லக்கிலும், அன்று இரவு பெண் பூத வாகனத்திலும் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் 5-ம் நாளான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மேள, தாளம் முழங்க உற்சவ அம்மனை அக்னி குளத்திற்கு ஊர்வலமாக பல்லக்கில் தூக்கி சென்றனர். அங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனை சிம்ம வாகனத்தில் அமர்த்தினர்.

அதனை தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அம்மன் மாலை 4.30 மணி அளவில் கோவிலுக்கு எதிரே அக்னி குண்டத்தின் முன்பாக எழுந்தருளினார். பின்னர் சாமிக்கும் பூக்குழிக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு பூ உருண்டையை உருட்டி விட்டதும் தலைமை பூசாரி முதலில் அக்னி குண்டத்தில் இறங்கினார். அவர் இறங்கியதும் கோவில் மேலாளர் முனியப்பனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் பல பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தி லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும், பறவை காவடி எடுத்தும் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்ன வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் பிரகாஷ், விழுப்புரம் ஜோதி, திருவண்ணாமலை மோகனசுந்தரம், அறங்காவலர்கள் கணேசன், ஏழுமலை, ரமேஷ், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள், ஏழு வம்சாவழி பூசாரிகள், கொடுக்கன்குப்பம் கிராம மக்கள் ஆகியோர் செய்திருந்தனர். விழாவையொட்டி மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையிலான வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News