ஆன்மிகம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நாளை நடக்கிறது

Published On 2019-03-09 08:07 GMT   |   Update On 2019-03-09 08:07 GMT
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மன்கோவில் பூச்சொரிதல் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடக்கிறது. அப்போது அம்மனுக்கு காப்பு கட்டப்படும். கோவில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கூடைகளில் பூக்களை ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனுக்கு சாற்றுவார்கள்.

நாளை நடப்பது போல் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை ஒவ்வொரு வாரமும் திருச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பக்தர்கள் மின் அலங்கார ஊர்திகளில் அம்மன் படத்துடன் பூக்களை கொண்டு வந்து சாற்றுவார்கள். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு எந்த விதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்கவேண்டும் என்பதற்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பதும் நாளை தொடங்குகிறது.

பச்சை பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களும் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு பானம், இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News