ஆன்மிகம்

மேற்கே பார்த்த வரதராஜபெருமாள்

Published On 2019-01-13 09:48 IST   |   Update On 2019-01-13 09:48:00 IST
திருவக்கரை தலத்தில் உள்ள பெருமாள் சன்னதி மேற்கு திசையைப் பார்த்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
வைணவத் தலங்களில் பெருமாள் கிழக்கு முகமாக பார்த்தே பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதற்கு ஏற்ப பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டிருக்கும். ஆனால் திருக்கரை தலத்தில் உள்ள பெருமாள் சன்னதி மேற்கு திசையைப் பார்த்த நிலையில் கட்டப்பட்டுள்ளது.

திருவக்கரை தலத்தில் எல்லா சன்னதிகளும் வக்கிரமாக மாறுபட்ட நிலையில் கட்டப்பட்டதற்கு ஏற்ப, பெருமாள் சன்னதியும் மாறுபாடாக உள்ளது. இத்தலத்து பெருமாள், வரதராஜபெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

வக்கிராசூரனை சம்ஹாரம் செய்யும் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால், பெருமாள் வழக்கமாக பார்க்கும் கிழக்கு திசையை தவிர்த்து விட்டு மேற்கு முகமாக நிற்கிறார். அவர் ஏந்தியுள்ள சக்கராயுதம், வக்கிராசூரனை வதம் செய்தபோது, எப்படி பிரயோகப்படுத்தப்பட்டதோ, அதே தோற்றத்துடன் உள்ளது.

அதாவது மற்ற வைணவத் தலங்களில் சக்கராயுதம் பெருமாளை நோக்கி இருக்கும். ஆனால் திருவக்கரை தலத்தில் மட்டும் பக்தர்களை நோக்கியபடி சக்கரம் இருக்கிறது. அசுரனை சக்கரத்தால் வதம் செய்து விட்டு வந்து அப்படியே அவர் காட்சி கொடுப்பதாக ஐதீகம்.

தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருளும் வரதராஜ பெருமாள் இங்கு தனியாக உள்ளார். அருகில் தாயார் இல்லை. இந்த சன்னதியின் ஒரு ஓரத்தில் ராமகிருஷ்ணன் சிலை உள்ளது. ராம அவதாரத்திலும், கிருஷ்ணர் அவதாரத்திலும் அந்த அவதாரங்கள் இங்கு காட்சி கொடுத்ததாக சொல்கிறார்.

ராமகிருஷ்ணர் சிலையின் ஒரு கையில் வில் உள்ளது. மற்றொரு கையில் புல்லாங்குழல் இருக்கிறது. கிருஷ்ணருக்கு அருகில் ருக்மணியும் ராமருக்கு அருகில் சீதையும் உள்ளனர். ஆலயத்தின் எதிரில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் உள்ளனர்.

மேற்கே பார்த்த வரதராஜபெருமாளை வழிபாடு செய்தால் தடைபட்ட திருமணம் உடனே கைகூடும் என்பது ஐதீகம். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் வரதராஜபெருமாளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News