ஆன்மிகம்
தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரருக்கு தீபாராதனை காட்டப்பட்ட போது எடுத்த படம்

பழனி முருகன் கோவிலில் மார்கழி மாத கார்த்திகை உற்சவ விழா

Published On 2018-12-21 03:18 GMT   |   Update On 2018-12-21 03:18 GMT
பழனி முருகன் கோவிலில் மார்கழி மாத கார்த்திகை உற்சவ விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவிலில் மார்கழி மாத கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. உடன் விஸ்வரூப தரிசனமும், 4.30 மணிக்கு தனூர் மாத பூஜையும் நடைபெற்றது. பின்னர் காலை 5.30 மணிக்கு விளா பூஜையில் முருகனுக்கு சன்னியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடன் அலங்காரமும், 9 மணிக்கு கால சந்திபூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரமும் செய்யப்பட்டது.

பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரமும், இரவு 9 மணிக்கு ராக்காலபூஜையில் வெள்ளைநிற மலர்களால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

மார்கழி மாத கார்த்திகை விழாவையொட்டி மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம், கால பூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் தரிசனத்துக்கான அனைத்து வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது.

108 விளக்கு பூஜை நடந்ததை படத்தில் காணலாம்.

6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரம் வலம் வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு மேல் சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளினார். அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 57 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தங்கரத புறப்பாட்டில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

தாண்டிக்குடி பாலமுருகன் கோவிலில் கார்த்திகை உற்சவ விழா நடந்தது. அதையொட்டி பெண்கள் விளக்கு பூஜை நடத்தினர். முருகனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் முருகப்பெருமான் பூந்தேரில் பவனி வந்தார். இதில் பாலமுருகன் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் உள்ள 27 நட்சத்திரங்களுக்குரிய மரக்கன்றுகளுக்கு பூஜை நடத்தப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
Tags:    

Similar News