ஆன்மிகம்

குலசேகரன்பட்டினம் கோவில் திருக்கல்யாண திருவிழா தொடங்கியது

Published On 2018-10-24 08:04 GMT   |   Update On 2018-10-24 08:04 GMT
குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி உடனுறை காஞ்சி விசயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி உடனுறை காஞ்சி விசயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சுமார் 1400 ஆண்டுகள் பழமை மிக்கதும், புராதான பெருமைகள் பல கொண்டதும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த கோவில் ஆண்டு தோறும் 13 நாட்கள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருவிழா நேற்று காலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரம், நந்தியம்பெருமாள், பலிபீடத்திற்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து அலங்கரிக்கப் பட்ட கொடிமரத்திற்கு சிறப்பு மகா தீபாராதனைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அப்பர் அடிகள் உழவாரப்பணி வீதி உலா, 7 மணிக்கு ரி‌ஷப வாகனத்தில் ஸ்ரீபலிநாதர் திருவீதிஉலா, இரவு 8.30 மணிக்கு அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது.

விழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவில் அம்பாள் கேடயம், காமதேனு, சிங்கம், ரி‌ஷபம், பூங்கோயில், அன்னம், மின் அலங்காரம், கிளி, பல்லக்கு சப்பரங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அறம் வளர்த்த நாயகி திருக்கூடத்தில் தினமும் மாலை 6.30 மணிக்கு தேவாரப் பண்ணிசை, சமய சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வருகிற 1-ந் தேதி காலை 7.30 மணிக்கு திருச்சுன்னம் இடித்தல் வைபவமும், 2-ந் தேதி இரவு7 மணிக்கு திருக்கல்யாணக் காப்புக் கட்டுதல், 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு அம்பாள் தபசுக்கு எழுந்தருளல், மாலை 4.30 மணிக்கு சுவாமி காட்சி கொடுக்க ரி‌ஷப வாகனத்தில் எழுந்தருளல், இரவு 11.30 மணிக்கு அம்பாள் பல்லக்கில் கதிர் குளிப்புக்கு எழுந்தருளல் நடைபெறும்.

4-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் அறம் வளர்த்த நாயகிக்கு திருமாங்கல்யதாரணம் திருமங்கல திருநாண் பூட்டுதல் வைபவம் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News