ஆன்மிகம்
இளநீர் வடிவில் இருக்கும் அரக்கனை வதம் செய்த காட்சியும், பரிவேட்டையை காண குவிந்திருந்த பக்தர்கள் கூட்டமும்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை திருவிழா

Published On 2018-10-20 03:40 GMT   |   Update On 2018-10-20 03:40 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடந்த பரிவேட்டை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு, அன்னதானம், வாகனபவனி, நாதஸ்வர கச்சேரி, பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

10-ம் திருவிழாவான நேற்று முக்கிய நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

காலை 8 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அன்னதானம் நடந்தது.

மதியம் 12 மணிக்கு அம்மன் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்காக மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.

இந்த ஊர்வலத்திற்கு முன்னால் பஜனை குழுவினர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பஜனை பாடி சென்றனர். தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் சங்கம் சார்பில் 3 யானைகளின் மீது பக்தர்கள் முத்துக்குடை பிடித்தபடியும் பகவதிஅம்மன் உருவ படத்தை தாங்கியபடியும் அணி வகுத்து சென்றனர். அதைத் தொடர்ந்து 3 குதிரைகளில் பக்தர்கள் வேடம் அணிந்து சென்றனர்.

மேலும் இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குபெற்ற நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி ஆட்டம் போன்றவை இடம் பெற்றன. அம்மன் எழுந்தருளி இருக்கும் வாகனத்தின் முன்னால் கோவில் பரம்பரை தர்மகர்த்தாக்கள் கோட்டாரை சேர்ந்த சுப்பிரமணியன் பிள்ளை கையில் வாள் ஏந்தியபடியும், சுண்டன்பரப்பு குமரேசன் வில்-அம்பு ஏந்திய படியும் நடந்து சென்றனர். அதன் பின்னால் பகவதி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பவனி சென்றார்.

அம்மன் பரிவேட்டைக்கு எழுந்தருளி செல்லும் போது வழி நெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு எலுமிச்சம்பழம் மாலைகள் அணிவித்து தேங்காய், பழம் படைத்து திருக்கண் சாத்தி வழிபட்டனர். ஊர்வலம் சன்னதி தெரு, தெற்குரதவீதி, ரெயில்நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, மகாதானபுரம் தங்கநாற்கர சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மாலையில் மகாதானபுரம் வேட்டை மண்டபத்தை சென்றடைந்தது.

அங்கு அம்மன் பாணா சுரன் என்ற அரக்கனை (இளநீர் வடிவில் இருக்கும் அரக்கன்) வேட்டையாடி வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து வாண வேடிக்கை நடந்தது.

பின்னர் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சியும், காரியக்கார மடத்துக்கு சென்று விட்டு அங்கு இருந்து வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

இரவு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ஆண்டுக்கு 5 நாட்களில் மட்டும் திறக்கப்படும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துபாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் கன்னியாகுமரியில் போக்குவரத்தும் மாற்றி விடப்பட்டு இருந்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டன.

கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பரிவேட்டை திருவிழாவில் பங்கேற்க வசதியாக நேற்று பகல் 12 மணிக்கு மேல் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீ ராமச்சந்திரன் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு தினமும் அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் போன்றவை நடந்தன. விழாவின் நிறைவு நாளான நேற்று பரிவேட்டை நடைபெற்றது. இதையொட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக முத்துக்குடையுடன், சிங்காரி மேளம் முழங்க யானை மற்றும் குதிரை வாகனத்தில் அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டார்.

ஊர்வலம் சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டு சன்னதிதெரு, நங்கை நகர், கன்னியாகுமரி மெயின் ரோடு வழியாக வழுக்கம்பாறை சந்திப்பை சென்றடைந்து. அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு அக்கறை, பேரம்பலம், மேலத்தெரு, வடக்குத்தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அம்மன் வீதி உலா வந்த போது பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருக்கண் சாத்தியும், மலர் தூவியும் வழிபட்டனர்.
Tags:    

Similar News