ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்த போது எடுத்த படம்.

நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்

Published On 2018-08-12 10:52 IST   |   Update On 2018-08-12 10:52:00 IST
நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆவணி மாதம் நடைபெறும் ஆவணி மூலத்திருவிழா கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் முக்கிய திருவிழா ஆகும். இந்த ஆண்டு ஆவணி மூலத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நேற்று அதிகாலை சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 11 மணிக்கு சுவாமி சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். இந்த திருவிழா மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகிறது.

4-வது நாளான 14-ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சூறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மர மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பரத்திலும், பஞ்ச மூர்த்திகளுடன் 4 ரதவீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

19-ந் தேதி நெல்லையில் இருந்து கருவூர் சித்தர் புறப்பட்டு மானூர் அம்பலவாண சுவாமி கோவிலை சென்றடைகிறார். 10-வது நாளான 20-ந் தேதி இரவு 1 மணிக்கு சுவாமி சந்திரசேகரர், பவானி அம்பாள், பாண்டியராஜ, சண்டிகேசுவரர், தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலிய கலய நாயனார் ஆகிய மூர்த்திகள் பல்லக்கிலும், சப்பரத்திலும் மானூருக்கு புறப்பட்டு செல்கின்றனர். மறுநாள் 21-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு மானூர் கோவிலை சென்றடைகின்றனர்.

அங்கு காலை 7 மணிக்கு கருவூர் சித்தருக்கு சுவாமி காட்சி தந்து சாப விமோசனம் நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வரலாற்று புகழ் மிக்க, புராண பாடல் பாடப்பெற்ற ஆவணி மூல மண்டபத்தில் வைத்து சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. 
Tags:    

Similar News