ஆன்மிகம்
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்த போது எடுத்த படம்.

அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம்

Published On 2017-05-08 05:53 GMT   |   Update On 2017-05-08 05:54 GMT
அவினாசியில் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற 7 சிவத்தலங்களில் முதலாவது தலம் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் ஆகும். இந்த கோவிலில் லிங்கேஸ்வரர், கருணாம்பிகை, சுப்பிரமணியர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

இந்த கோவிலில் சித்திரை மாதம் தேர்த்திருவிழா கடந்த மாதம் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்றுமுன்தினம் அதிகாலை யாகசாலை பூஜைகள் நடந்தது. விநாயகப்பெருமான், அவினாசியப்பர், கரிவரதராஜப்பெருமாள் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலை 6.30 மணியளவில் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் உற்சவ மூர்த்திகள், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரிய தேருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அப்போது அதிர்வேட்டுகள் முழங்க நாதஸ்வர இசை, பஞ்ச வாத்தியங்கள் ஒலிக்க சாமிகள் ரதத்தின் மீது அமர்த்தப்பட்டனர். இதையடுத்து பெரியதேரில் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரி அம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறிய தேரில் கருணாம்பிகை அம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து சோமஸ்கந்தர்-உமாமகேஸ்வரி, மற்றும் கருணாம்பிகை அம்மனை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நேற்றுகாலை ரதத்தின் மீது இருந்த உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்றுகாலை 10.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தில் சபாநாயகர் தனபால், அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேருக்கு பின்னால் நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் எந்திரம் தேரை தள்ளியது. இந்த தேர் அசைந்தாடி ரத வீதிகள் வழியாக சென்றது. அவினாசி -கோவை மெயின் ரோடு நிலையிலிருந்து புறப்பட்ட தேர் மேற்குரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்குரத வீதி வழியாக வலம் வந்து மாலை 4.30 மணியளவில் தேர் நிலையை அடைந்தது.

இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு அம்மன் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இன்று மாலை வண்டித்தாரை, பரிவேட்டை ஆகிய நிகழ்ச்சி, நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு தெப்ப தேர்த்திருவிழா நடக்கிறது. 10-ந்தேதி காலை நடராஜர் தரிசனம், 11-ந்தேதி காலை மஞ்சள் நீர்விழா, மயில் வாகன காட்சி நடக்கிறது. தேர்த்திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News