ஆன்மிகம்
ஆகாசராயர் கோவிலுக்கு, மண்ணால் செய்யப்பட்ட குதிரையை சுமந்து நடந்து வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

லிங்கேசுவரர் கோவில் திருவிழா: மண் குதிரையை சுமந்து வந்து ஆகாசராயருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Published On 2017-04-22 08:17 GMT   |   Update On 2017-04-22 08:17 GMT
அவினாசி லிங்கேசுவரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மண் குதிரையை சுமந்து வந்து ஆகாசராயருக்கு நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினார்கள்.
அவினாசிலிங்கேசுவரர் கோவில் திருவிழா வருகிற 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவை முன்னிட்டு அவினாசி அருகே உள்ள சின்ன கருணைப்பாளையத்திலிருந்து, அவினாசி மங்கலம் ரோட்டில் உள்ள ஊர்க்காவல் தெய்வமான ஆகாசராயர் கோவிலுக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட குதிரையை சுமந்து கொண்டு நடந்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதற்காக சின்ன கருணைப்பாளையத்தில் இருந்து களிமண்ணால் செய்யப்பட்ட குதிரையை மலர்களால் அலங்கரித்து பூஜை செய்தனர். அப்போது தாரை, தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து, களி மண்ணால் செய்யப்பட்ட குதிரையை சுமந்து கொண்டு, சின்ன கருணைப்பாளையத்திலிருந்து பக்தர்கள் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஊர்க்காவல் தெய்வமான ஆகாசராயர் கோவிலுக்கு வந்தனர்.

குதிரையை சுமந்து வரும் ரோட்டில் தண்ணீர் ஊற்றி பொதுமக்கள் வரவேற்றனர். கொளுத்துகின்ற வெயிலில் குதிரையை சுமந்து சென்ற பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் நீர் வழங்கப்பட்டது. பின்னர் ஆகாசராயருக்கு அபிஷேகம், அலங்காரம், மாகாதீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பொங்கல் வைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் கலந்து கொண்டனர்.

Similar News