ஆன்மிகம்
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியபோது எடுத்த படம்.

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

Published On 2017-02-02 12:25 IST   |   Update On 2017-02-02 12:25:00 IST
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு சுவாமி சுயம்புவாக தோன்றி, பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொடிப்பட்டம் ஊர்வலம் நான்கு ரதவீதிகளில் நடந்தது. சுவாமி சந்திரசேகரர்- மனோன்மணி அம்பிகை ஆகியோர் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை முதலியவை நடைபெற்றது. காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.

அதை தொடர்ந்து விநாயகர் வீதிஉலா, உச்சிகால பூஜை, சிறப்பு அபிஷேகம், சாயரட்சை சிறப்பு அபிஷேகம், இரவில் சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதிஉலா வருதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா நாட்களில் தினமும் காலை விநாயகர் வீதிஉலா, சுவாமி சந்திரசேகரர்-மனோன்மணி அம்பிகை ஆகியோர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா, சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

9- திருவிழாவான வருகிற 9-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதிஉலாவும், இரவு தெப்ப திருவிழாவும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன் செய்துள்ளார்.

Similar News