ஆன்மிகம்

மதுரையில் சித்ரா பௌர்ணமி சிறப்பாக கொண்டாட காரணம்

Published On 2016-04-16 14:34 IST   |   Update On 2016-04-16 14:34:00 IST
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக கருதப்படுகிறது
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்திராசூரன், விஸ்வரூபன் என்ற இருவரை இந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.

அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் கெடுதல் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான்.

இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். மதுரை மீனாட்சியம்மன் அம்மன் தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது.

ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் சிறப்பாகக் கருதப்படுகிறது.

Similar News