கோவில்கள்

பெரியநாயகி உடனுறை அருணஜடேசுவரர் திருக்கோவில்

Published On 2023-07-07 06:32 GMT   |   Update On 2023-07-07 06:32 GMT
  • இறைவன் அருணஜடேசுவரர் என்று அழைக்கப்படுகிறார்.
  • இந்த ஆலயம் திருப்பனந்தாள் திருத்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

உலககெங்கும் வியாபித்து நிற்கும் சிவபரம்பொருள் ஆன்மாக்கள் தன்னை வழிபட்டு உய்வுபெறவேண்டும் என்ற கருணையுடன் எழுந்தருள்பாலிக்கும் அருள்நிலையங்களே திருக்கோவில்களாகும். அத்தகைய திருக்கோவில்களில் தேவாரப்பதிகங்கள் பெற்றவை மிக சிறப்புடையவை. அவைகளில் ஒன்றாக வடகாவிரி எனப்படும் கொள்ளிடம் மற்றும் மண்ணியாற்றிற்கு இடையே அமைந்துள்ள தலமே திருப்பனந்தாள். இங்குள்ள பெரியநாயகி உடனுறை அருணஜடேசுவரர் ஆலயம், தருமை ஆதீனத்திற்குட்பட்ட 27 கோவில்களில் ஒன்று.

முற்காலத்தில் மட்டுமல்ல தற்காலத்திலும் 'தண்பொழில் சூழ் பனந்தாள்' என்ற ஞானசம்பந்தர் திருவாக்கிற்கேற்ப, பனை மரங்கள் நிறைந்திருக்கும் இடம் என்பதால் இவ்வாலயம் உள்ள ஊர், 'திருப்பனந்தாள்' என்று பெயர் பெற்று விளங்குகிறது. இவ்வாலய இறைவன், பனை மரத்தின் கீழ் எழுந்தருளிய சுயம்பு மூர்த்தியாவார். பிரணவ மந்திர உபதேசம் பெற விரும்பிய அம்பிகை, இத்தலத்திற்கு வந்து அருந்தவம் இயற்றி ஞானோபதேசம் பெற்றதால் இது 'உபதேசத் தலம்' என்றும் அழைக்கப்படுகிறது.

சிவபெருமானின் யோக குரு வடிவமே, தட்சிணாமூர்த்தி. இவர் எல்லா சிவாலயங்களிலும் தென்முகமாக அமர்ந்திருப்பார். ஆனால் சில ஆலயங்களில் மூலவரே குருவாக (சிவ குரு) இருந்து அருள்பாலிப்பதும் உண்டு. அத்தகைய விசேஷமான ஆலயங்களில் இதுவும் ஒன்று. நவக்கிரக குருவின் தோஷத்தால் திருமணத்தில் தடை ஏற்பட்டு வருந்துவோர், இதுபோன்ற சிவ குரு தலங்களை தரிசித்தால் நவக்கிரகங்களின் தோஷம் அகன்று உடனடியாக திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம். மூலவரே சிவ குருவாக அருள்பாலிக்கும் இத்தலத்தை, அட்டநாகங்களில் ஒன்றான வாசுகியின் மகள் சுமதி வழிபட்டு திருமண வரம் பெற்று, அரித்துவசன் என்ற மன்னனை மணந்ததாக செஞ்சடைவேதியர் எழுதிய 'திருப்பனந்தாள் தல புராணம்' கூறுகிறது.

இத்தல இறைவனுக்கு அனுதினமும் மாலை சூட்டி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள், தாடகை என்ற பெண். ஒரு நாள் மாலை சாத்தும்போது அவளது மேலாடை சரிந்தது. உடல் அவயங்கள் தெரிய மாலை சாத்துவது தவறு என்று கருதியவள், தன்னுடைய மேலாடையை ஒரு கையால் பிடித்தவாறு மாலை சாத்த முயன்றாள். ஆனால் அவளால் முடியவில்லை. இதைக் கண்ட பெருமான், அவளது பக்திக்கு இரங்கி, தன்னுடைய பாணத்தை சற்றே முன்னோக்கி வளைத்து மாலையை பெற்றுக்கொண்டார். அப்படி சாய்ந்த பெருமான், அதன்பிறகு நிமிரவில்லை. லிங்கத்தை நிமிர்த்த பல முயற்சிகள் மேற்கொண்டும் அது நடக்கவில்லை.

திருக்கடவூரில் இறைவனுக்கு அனுதினமும் குங்கிலிய புகை போடுவதை திருப்பணியாக செய்துக் கொண்டிருந்த குங்கிலியக்கலய நாயனார், சிவலிங்கம் வளைந்திருக்கும் செய்தி கேட்டு திருப்பனந்தாள் வந்தார். சிவலிங்கத்திற்கு ஒரு மாலை சூட்டி, அந்த மாலையுடன் லிங்கத்தை ஒரு பெருங்கயிற்றால் கட்டி, கயிற்றின் மறுமுனையை தன் கழுத்தில் கட்டிக்கொண்டு 'அன்புக்கு வணங்கிய அரனே என் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்' என்று மனமுருகி வழிபட்டு சிவலிங்கத்தை இழுத்தார். யானைகளாலே நிமிர்த்த முடியாத சிவலிங்கம், மனிதன் முயன்றால் உயிர் அல்லவா போய்விடும். ஒரு பக்தைக்காக தலை சாய்ந்த ஈசன், இன்னொரு பக்தருக்காக நிமிர்ந்து நின்று அருள்பாலித்தார்.

தேவார பதிகங்கள் பாடல் பெற்ற ஆலயங்களில் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்த 39-வது திருத்தலம் இது. ஆலயத்தின் பெயர் 'தாலவனம்'. தமிழில் தாடகைஈச்வரம். இறைவன் அருணஜடேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். இனிய தமிழில் 'செஞ்சடையப்பர்' என்பது அவரது பெயர். இறைவியை தமிழில் பெரியநாயகி என்றும், வடமொழியில் பிரகன்நாயகி என்றும் சொல்கின்றனர். தேவலோக கற்பகத் தருவிற்கு இணையானது, பூலோகத்தில் உள்ள பனை மரம். அதுவே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக இருக்கிறது. இவ்வாலயத்தில் பிரம்ம தீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், ஆதிசேஷ தீர்த்தம், அரித்துவச தீர்த்தம், நாககன்னிகை தீர்த்தம், தருமசேன தீர்த்தம், கூப தீர்த்தம், மண்ணியாறு முதலாகிய தீர்த்தங்கள் ஆலயத்தின் உள்ளும் புறமும் இருக்கின்றன.

இவ்வாலய இறைவனை அம்பிகை, பிரம்மன், திருமால், சூரியன், ஆதிசேஷன், நாகக்கன்னி, ஐராவதம் என்னும் வெள்ளை யானை, குங்கிலியக்கலய நாயனார், கவிகாளமேகப் புலவர், தாடகை, வேடுவர் தலைவனான சங்குகண்ணன், அந்தணர் குலத்தில் உதித்து வழிப்பறி செய்து கொண்டிருந்த நாகுன்னன் உள்ளிட்ட பலர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். சிவ - பார்வதி திருமணத்தைக் காண அனைவரும் கயிலாயத்தில் குவிந்ததால், வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. இதை சரி செய்வதற்காக அகத்தியரை சிவபெருமான் தெற்கு நோக்கி அனுப்பிவைத்தார். அப்படி வந்த அகத்தியர் சிவனை வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. திருஞானசம்பந்தரால் இவ்வாலயத்தில் ஒரு பதிகம் பாடப்பெற்றுள்ளது. இவ்வாலய முருகப்பெருமானை அருணகிரிநாதர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

ஆலய அமைப்பு

ஏழு நிலைகளுடன் மேற்கு நோக்கிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. அதைத் தாண்டி உள்ளே செல்ல 16 கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தாடகையால் சாத்தப்பட்ட மாலையை ஏற்றுக்கொள்ள பெருமான், தலை குனிந்தது, சாய்ந்த சிவலிங்கத்தை மன்னன் யானைகளை கட்டி இழுத்து நிமிர்த்த முயன்றது, குங்கிலியக்கலய நாயனார் தன் கழுத்தில் கயிறு கட்டி சிவலிங்கத்தை நிமிர்த்தியது போன்ற காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக வடக்கே அலங்கார மண்டபம் உள்ளது. வெளிப்பிரகார சுற்றில் அலங்கார மண்டபத்தை ஒட்டி, நாகக்கன்னி உருவாக்கிய நாககன்னி தீர்த்தம் உள்ளது. வடமேற்கில் யாகசாலையும், கிழக்கில் அம்பாள் கோபுரமும், மேற்கிலுள்ள இரண்டாவது கோபுரத்தை அடுத்த உட்பிரகாரசுற்றில் வவ்வால் நெற்றி மண்டபமும் இருக்கிறது. இதில் குங்கிலியகலய நாயனார் மற்றும் சொக்கநாதர் சன்னிதிகள் உள்ளன.

உட்பிரகாரச்சுற்றில் அம்பாளின் தனிச் சன்னிதி உபதேச அமைப்பில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய இந்தச் சன்னிதிக்காகவே கிழக்கு கோபுரம் ஏற்படுத்தப்பட்டது. அம்பாள் சன்னிதிக்கு முன்பு பலிபீடம், நந்தி உள்ளன. இச்சன்னிதியில் அம்பாள், தேஜஸ்வினியாக வீற்றிருக்கிறார். அம்மன் சன்னிதி முன்பாக துவாரபாலகிகள் உள்ளனர். கிழக்கில் நவக்கிரகங்கள், கோவிலின் தல விருட்சமான ஆண் மற்றும் பெண் பனை மரங்கள் உள்ளன. தல விருட்சத்திற்கு அருகில் கிணறு உள்ளது, இந்த கிணற்றின் வழியாகவே நாக கன்னிகை இறைவனை வழிபட வந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாலய இறைவனை 12 வாரங்கள் வழிபட்டு வந்தால் ஞானமும், அறிவும் சித்திக்கும். நாகதோஷம் காலசர்ப்ப தோஷம் உள்ளோர் நாக கன்னிகைக்கு வேண்டிக்கொண்டு நாக கன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி வழிபட வேண்டும். ராகு காலங்களில் பாலாபிஷேகம் செய்வதும் பலன் தரும். காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும் இவ்வாலயத்தில், ஆறு கால பூஜை நடைபெறுகின்றன.

கடந்த 2003-ம் ஆண்டு இவ்வாலயத்தில் கும்பா பிஷேகம் நடைபெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப்பின் இன்று (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த ஆலயத்துடன் இணைத்து, திரிபுரசுந்தரி உடனுறை ஊருடையப்பர் திருக்கோவில், காசிமடத்தைச் சேர்ந்த விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதர் திருக்கோவில் மற்றும் சிற்றாலயங்கள் சிலவற்றிற்கும் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

அமைவிடம்

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கும்பகோணத்தில் இருந்து 20 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ளது, திருப்பனந்தாள் திருத்தலம்.

-நெய்வாசல் நெடுஞ்செழியன்.

Tags:    

Similar News