கோவில்கள்

அதிசயங்கள் நிறைந்த வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் திருக்கோவில்

Published On 2023-06-30 07:00 GMT   |   Update On 2023-06-30 07:00 GMT
  • இது ஒரு பழமையான திருக்கோவில் என்பது மட்டும் ஆதாரப்பூர்வமாக தெரிகிறது.
  • நந்தியோடு இணைத்து செய்யப்படும் பிரதோஷம் இங்கு பிரதானம்.

புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில் உள்ளது, நெய் நந்தீஸ்வரர் திருக்கோவில். இவ்வாலயத்தின் பிரதான தெய்வமாக மீனாட்சி அம்மன் சமேத சொக்கலிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இருப்பினும் இங்குள்ள நந்தியே சிறப்புக்குரியது என்பதால், நந்தியின் பெயரிலேயே இவ்வாலயம் புகழ்பெற்று விளங்குகிறது.

தல வரலாறு

இந்த ஆலயம் பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட பிரார்த்தனை தலமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்பகுதிக்குச் சென்ற பாண்டியர்கள், தங்களின் இஷ்ட தெய்வமான மீனாட்சி - சொக்கநாதரை, பிரதோஷ வேளையில் வழிபடுவதற்காக இந்தக் கோவிலை உருவாக்கியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இந்த ஆலயத்தின் வரலாறு சரியாக கிடைக்கப்பெறவில்லை. என்றாலும் இது ஒரு பழமையான திருக்கோவில் என்பது மட்டும் ஆதாரப்பூர்வமாக தெரிகிறது.

சோழர்களும் இந்த ஆலயத்திற்கு திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். கொடும்பாளூரில் இருந்து தஞ்சாவூர் கோவிலுக்கு இரண்டு நந்திகள் கொண்டுவரப்பட்டன. அதில் பெரிய நந்தி தஞ்சாவூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், சிறிய நந்தி வேந்தன்பட்டியில் வைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதனால் வேந்தன்பட்டி நந்தியை 'தம்பி நந்தி' என்றும் சொல்கிறார்கள். இங்குள்ள நந்தீஸ்வரர், தஞ்சாவூர் நந்தீஸ்வரருக்கு தம்பியாக கருதப்படுவதால் இந்தப் பெயர் வந்ததாம்.

இந்த ஆலயத்திற்கு மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது இவ்வூரில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த பக்தர் ஒருவர், நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாமல் விட்டுவிட்டார். நந்தியை புனிதம் என்று கருதிய அந்த பக்தர், அதனை தீர்த்தக் குளத்திற்குள் வைத்துவிட்டார். ஒரு முறை அந்த பக்தருக்கு கடுமையான வயிற்றுவலி உண்டானது. நோய் குணமாக மானசீகமாக சிவபெருமானை பிரார்த்தித்தார். ஒரு நாள் அவரை மாடுகள் விரட்டுவது போல கனவு வந்தது. சிவாலயத்தில் நந்தியை பிரதிஷ்டை செய்யாததுதான் அனைத்திற்கும் காரணம் என்று கருதிய அந்த பக்தர், உடனடியாக நந்தி ஒன்றை ஆலயத்திற்குள் பிரதிஷ்டை செய்தார். அதற்கு நெய் அபிஷேகமும் செய்தார். அவரின் வயிற்றுவலி நீங்கியது. இதையடுத்து இத்தல நந்திக்கு, நெய் அபிஷேகத்தை பிரதான அபிஷேகமாக செய்யும் வழக்கம் உருவானது.

இங்கு வரும் பக்தர்கள் தங்களின் எந்த வேண்டுதலாக இருந்தாலும், அது நிறைவேறியதும் நந்தி பகவானுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். அந்த வகையில் ஒரு நாளைக்கு பல லிட்டர் கணக்கில் நந்திக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. வீட்டில் சிறிதளவு நெய் கீழே கொட்டினாலும், ஈக்களும், எறும்புகளும் மொய்க்கத் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆலயத்தில் அவ்வளவு நெய் கொண்டு அபிஷேகம் செய்த போதிலும் ஒரு ஈயோ, எறும்போ வருவதில்லை. ஆரம்ப காலத்தில் அபிஷேக நெய்யை கோவிலில் தீபம் ஏற்ற பயன்படுத்தியுள்ளனர். அப்படி பயன்படுத்தப்பட்ட நெய், ரத்தம் போல சிவப்பமாக மாறியதாம். எனவே அபிஷேக நெய்யை பிற உபயோகத்திற்காக பயன்படுத்தாமல், ஆலயத்திற்குள் அமைக்கப்பட்ட கிணற்றுக்குள் கொட்டி விடுகின்றனர். இந்த கிணற்றிலும் ஈக்கள், எறும்புகள் மொய்ப்பதில்லை என்பது அதிசயமாகவே இருக்கிறது.

நந்தியம்பெருமானுக்கு ரிஷபம் என்ற பெயரும் உண்டு. ஆகையால் இது ரிஷப ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. ஜாதகத்திலோ, அவ்வப்போது நிகழும் கிரகப் பெயர்ச்சிகளிலோ பாதிக்கப்படும் ரிஷப ராசிக்காரர்கள், தோஷ நிவர்த்திக்காக இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். நந்திக்கு முக்கியத்துவம் உள்ள கோவில் என்பதால், சுவாமி-அம்பாள் தவிர நந்திக்கும் தனியாக அர்ச்சனை செய்யும் நடைமுறை இங்கு காணப்படுகிறது. கால்நடை வளர்ப்பவர்கள் அவை நோயின்றி வாழவும், பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய பொருட்களை விற்பனை செய்வோர் வியாபாரம் செழிக்கவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். நோயால் அவதிப்படும் கால்நடைகள் குணமாக, நந்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பெற்றுச் சென்று கால்நடைகளுக்கு புகட்டுகின்றனர்.

இந்த ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் அன்று, நந்தியின் அருகில் பிரதோஷ நாயகரை எடுத்தருளச் செய்து, இருவருக்கும் ஒரே நேரத்தில் அபிஷேகம் செய்யும் நடைமுறை உள்ளது. பின் பழங்கள், பூக்கள், இனிப்பு பலகாரங்கள், போன்றவற்றைக் கொண்டு நந்தியை அலங்காரம் செய்கிறார்கள். அதன்பிறகு பிரதோஷ நாயகர் தன்னுடைய சன்னிதிக்கு எழுந்தருள்வார். வைகாசி விசாகத்தை ஒட்டி மூன்று நாள் விழா இவ்வாலயத்தில் நடக்கிறது. அப்போது காவடி தூக்கியும், பூக்குழியில் இறங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

மூலவரான சொக்கலிங்கேஸ்வரருக்கு இடதுபுறம் மீனாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. இந்த அன்னையை வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடந்தேறும். இத்தல அம்பாளுக்கு மஞ்சள், குங்குமம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்தும் பக்தர்கள், மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டிக்கொள்கின்றனர். இவ்வாலய பிரகாரத்தில் விநாயகர், சூரியன், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், மகாலட்சுமி, பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர்.

இந்தக் கோவிலில் மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், ஐப்பசி மாத பவுர்ணமியில் அன்னாபிஷேகம், சித்ரா பவுணர்மி வழிபாடு, வைகாசி விசாகம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நிகழ்வுகள் வெகுவிமரிசையாக நடைபெறுகின்றன. சிவபெருமானுக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக நடைபெறும் என்றாலும், நந்தியோடு இணைத்து செய்யப்படும் பிரதோஷம் இங்கு பிரதானம். அதுவும் சனிக்கிழமை வரும் மகா பிரதோஷம் என்றால், ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் இரட்டிப்பாக இருக்கும்.

அமைவிடம்

புதுக்கோட்டையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும், திருமயத்தில் இருந்து 34 கிலோமீட்டரிலும், பிள்ளையார்பட்டியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, வேந்தன்பட்டி திருத்தலம்.

Tags:    

Similar News