கோவில்கள்

நைமிசாரண்யம் திருத்தலம்: வனம் வடிவில் அருளும் இறைவன்

Published On 2023-02-08 01:28 GMT   |   Update On 2023-02-08 01:28 GMT
  • மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக நைமிசாரண்யமும் போற்றப்படுகிறது.
  • இங்குள்ள பெரிய ஆலமரம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

முற்காலத்தில் முனிவர்களும், யோகிகளும், வடநாட்டில் உள்ள நைமிசாரண்யம் என்ற இடத்தில் தவம் செய்ததாக புராண நூல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நைமிசாரண்யம், 16 கிலோமீட்டர் தூரம் அடர்ந்து, விரிந்து கிடக்கும் காட்டுப் பகுதியாகும். இங்கு வன வடிவில் இறைவன், பக்தர்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக நைமிசாரண்யமும் போற்றப்படுகிறது.

நைமிசாரண்யத்தில் இருந்துதான் சூதமுனிவர், மகாபாரதம் உள்ளிட்ட பல்வேறு புராணங்களை சவுகனர் தலைமையிலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார் என்று புராண நூல்கள் கூறுகின்றன. நான்கு யுகங்களில் நான்கு முதன்மை தீர்த்தங்கள் அல்லது நான்கு புனித தலங்கள் இங்கு இருந்ததாக கூறப்பட்டுள்ளன.

தல வரலாறு

ஒரு காலத்தில் தவ வலிமைமிக்க முனிவர்கள் சவுகனர் தலைமையில் ஒன்று கூடி, பன்னிரண்டு ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியை நடத்த விரும்பினர். வேள்வி நடத்துவதற்கான சிறந்த இடத்தைத் தேர்வு செய்து தரும்படி பிரம்மாவிடம் வேண்டினர். பிரம்மா ஒரு தர்ப்பை புல்லை எடுத்து, அதை ஒரு வளையமாக்கி, கீழே உருட்டினார். 'அந்த தர்ப்பை வளையம் எங்கு விழுகிறதோ, அதுவே தவம் செய்வதற்கு ஏற்ற இடம்' என்று தெரிவித்தார். பிரம்மதேவன் உருட்டி விட்ட தர்ப்பை வளையம், கோமதி ஆற்றங்கரையில் வந்து விழுந்தது. அந்த இடமே 'நைமிசாரண்யம்' ஆகும்.

இந்த இடமே வேள்வி செய்ய உகந்த இடம் என்று கருதிய முனிவர்கள், வேள்விக்கான பணியைத் தொடங்கினர். 'நேமி' என்பதற்கு 'சக்கரம்' அல்லது 'சக்கர வளையம்' என்று பொருள். 'ஆரண்யம்' என்றால் 'காடு'. நேமி சார்ந்த ஆரண்யம் என்பதே நைமிசாரண்யம் என்றானது. இங்கு முனிவர்கள் தொடங்கி நடத்திய வேள்வியின் முழுப் பலனையும், திருமாலுக்கு வழங்குவது என்று முடிவு செய்தனர். வேள்வியில் தோன்றிய அவிர்பாகத்தை திருமாலுக்கு வழங்க, அதை அவர் ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் அருள்புரிந்தார்.

இந்த கருத்தை பின்பற்றியே இங்குள்ள மக்கள் இறைவனை, ஆரண்ய வடிவில் (காடுகள் உருவில்) வணங்குகின்றனர். ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்பிய ராமர், அதன்பின் அஸ்வமேத யாகம் செய்த இடம் இது என்று சொல்லப்படுகிறது. அதைப்போல சீதை கடைசியில் பூமிக்குள் மறைந்த இடமும் இதுதான். ஆதிசங்கரர் இங்கே வந்து தியானம் செய்துள்ளார். கிருஷ்ண பக்தரான, கண் பார்வையற்ற சூர்தாஸ் வாழ்ந்த இடம் இது. சவுகன ரிஷி மகாபாரதத்தை மற்ற ரிஷிகளுக்கு விளக்கிக்கூறிய இடமாகவும் இது அறியப்படுகிறது. முப்பத்துமுக்கோடி தேவர்களும் தவம் செய்த இடம் என்ற பெருமைக்குரியதாகவும் நைமிசாரண்யம் உள்ளது.

இத்தலத்தில் எம்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில், 'தேவராஜன் ஸ்ரீஹரி' என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். தாயாரின் பெயர் ஸ்ரீ ஹரி லட்சுமி என்பதாகும். புண்டகவல்லி என்ற பெயரும் அவருக்கு உண்டு. இத்தலத்தின் தீர்த்தம், சக்கர தீர்த்தம் மற்றும் கோமதி தீர்த்தம். விமானம் ஹரி விமானம். இறைவனுக்கு சங்கரநாராயணன் என்ற பெயரும் உள்ளது. சக்கர நதிக்கரையில், சக்கரத்தாழ்வார், லட்சுமி, சீதை ஆகியோருக்கு கோவில்கள் உள்ளன. விநாயகருக்கும் தனிச் சன்னிதி இருக்கிறது.

ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்கள், 18 புராணங்கள், ஆறு சாஸ்திரங்களும் கூட இங்கு இருந்துதான் எழுதப்பட்டிருக்கின்றன. கிருஷ்ணர், பலராமர், பாண்டவர்கள் போன்றோர் இத்தலத்திற்கு வருகை புரிந்துள்ளனர். தற்போது இங்குள்ள ஆலயத்தில், ஆழ்வார்கள் பாடிய மூர்த்திகள் இல்லை. சக்கர தீர்த்தம் மற்றும் கோமதி நதி ஆகிய இரண்டு புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. கோமதி நதிக்கு 'ஆகாச கங்கை' என்ற பெயர் உண்டு. இந்த நதிதான் பிரம்மதேவனால் பூமியில் முதன்முதலில் படைக்கப்பட்ட நதி என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த தீர்த்தத்தில் நீராடினால் இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். பதினான்கு உலகில் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் உள்ளடக்கியதாக கோமதி தீர்த்தம் இருக்கிறது.

நைமிசாரண்யத்தில் உள்ள பிரதான தீர்த்தமாக, சக்கர தீர்த்தம் திகழ்கிறது. இந்த தீர்த்தத்தை, மகாவிஷ்ணு தன்னுடைய சுதர்சன சக்கரத்தால் உருவாக்கியதாக கூறப்படுகிறது. வட்ட வடிவத்தில் உள்ள தீர்த்த குளத்தில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அதை பக்தர்கள் புனித நீராக கருதி கையில் எடுத்து தலையில் தெளித்துக் கொள்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து புனித தீர்த்தங்களின் நீரும், இந்த சக்கர தீர்த்தத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

நைமிசாரண்ய சிறப்புகள்

* இங்குள்ள பூதேஸ்வரர் மகாதேவ் கோவில், புராதனம் மிகுந்தது. இவ்வாலய சுவரில், அனைத்து இந்து தெய்வங்களின் படங்களும் உள்ளன. சிவலிங்கத் திருமேனிக்கு பின்புறம் உள்ள சுவரில் மகாவிஷ்ணுவின் சிற்பம் இருக்கிறது. கணேசன், கார்த்திகேயன், சூரியன், மகிஷாசுரமர்த்தினியாக துர்க்கா தேவி, பிரம்மா ஆகியோரும் காட்சி தருகின்றனர்.

* ஸ்ரீ லலிதாம்பிகைக்கு ஒரே வளாகத்தில் இரண்டு கோவில்கள் உள்ளன. உயரமான பீடத்தில் புதிய சிலை உள்ளது. வெளியே சுற்றிவரும் போது முக்கோண வடிவில் யாக குண்டத்தைக் காணலாம். அருகிலேயே பழமையான லலிதா சிலை அமைந்த சன்னிதியும் இருக்கிறது. தட்சனின் யாகத்தில் கோபத்துடன் தன்னை மாய்த்துக் கொண்ட பார்வதியின் உடலில், இதயம் விழுந்த இடமாக இது கருதப்படுகிறது.

* இங்கு ஒரு பெரிய ஆலமரம் அமைந்துள்ளது. இது 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் அமர்ந்துதான் வியாசர், நான்கு வேதங்களையும், புராணங்களையும், சாஸ்திரங்களையும் முனிவர்களுக்கு விவரித்ததாக கூறுகிறார்கள். இதனால் இதனை 'வியாசஸ்காடி' என்று அழைக்கிறார்கள்.

* திரேதா யுகத்தில் அகி ராவணன், மகி ராவணன் என்ற அசுரர்கள், ராம -லட்சுமணர்களை பாதாள லோகத்துக்கு கொண்டு சென்றனர். அனுமன் அவர்களைக் கொன்று ராம-லட்சுமணனை தோளில் சுமந்து வந்தார். பாதாளத்தில் இருந்து அனுமன் வெளிவந்த இடம், நைமிசாரண்யம் என்று சொல்லப்படுகிறது. இங்கு ராமரையும், லட்சுமணனையும் தன்னுடைய தோளில் தாங்கிய நிலையில் அனுமன் கோவில் உள்ளது.

அமைவிடம்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் நைமிசாரண்யம் திருத்தலம் அமைந்துள்ளது. அங்கிருந்து நேரடி பஸ் வசதி உள்ளது. சீதாபூரில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்திலும், சண்டிலா ரெயில் நிலையத்தில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும், சீதாப்பூர்-கைரபாத் சாலைகளின் சந்திப்பிலும் இவ்விடம் அமைந்துள்ளது.

மரு.நா.மோகன்தாஸ், தஞ்சாவூர்.

Tags:    

Similar News