கோவில்கள்

திருமண வரம் அருளும் கல்யாண வரதராஜப் பெருமாள் ஆலயம்

Published On 2023-06-03 07:51 GMT   |   Update On 2023-06-03 07:51 GMT
  • சுமார் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம் இது.
  • கல்யாண வரதராஜரை தரிசித்து பிரார்த்தனை செய்தால் திருமணம் விரைவில் நடைபெறுவதாக பலர் கூறுகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள பல ஆலயங்களில் ஆத்தூரில் அமைந்துள்ள கல்யாண வரதராஜப் பெருமாள் ஆலயம் முக்கியமானது. பாலாற்றின் கரையில் அமைந்துள்ளதால் இந்த ஊர் `முன்னர் ஆற்று ஊர்' என்ற அழைக்கப்பட்டு பின்னர் மருவி `ஆத்தூர்' என்று வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

பிற்கால பல்லவ மன்னர் வம்சத்தைச் சேர்ந்த கோப்பெருஞ்சிங்கன் விழுப்புரத்திற்கு அருகில் அமைந்த சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர். பல கோவில்களை நிர்மாணித்தவர். சிதிலமடைந்த பல கோவில்களுக்கு திருப்பணிகள் பல செய்த பெருமை உடையவர்.

கோப்பெருஞ்சிங்கன் காஞ்சிக்கு அருகே நடைபெற்ற ஒரு போரில் வெற்றி வாகை சூடி பின்னர் வரதராஜப் பெருமாளை வழிபட்டார். கோவிலில் வரதராஜப் பெருமாள் தரிசனம் கொடுத்தார். அப்போது கோப்பெருங்சிங்கனின் மனதில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக கல்யாணக் கோலத்தில் வரதராஜப்பெருமாளை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது. இதே எண்ணத்துடன் காஞ்சியில் இருந்து புறப்பட்டு பாலாறு ஓரமாகத் தன் தலைநகரை நோக்கி பயணப்பட்டார்.

வழியில் நதிபுரம் என்ற ஆத்தூரில் தனது படைகளுடன் தங்குகிறார். தனது கூடாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த கோப்பெருங்சிங்கனின் கனவில் வரதராஜர், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக கல்யாணக் கோலத்தில் காட்சி தருகிறார். பக்திப்பரவசத்துடன் பெருமாளே என்று விழித்துக் கொள்ளுகிறார் மன்னர். உடனே ஆத்தூரில் கல்யாணக் கோலத்தில் வரதராஜருக்கு ஒரு ஆலயம் எழுப்பினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு நகரத்திற்கு அருகில் ஆத்தூர் என்ற ஊரில் கல்யாண வரதராஜர் கோவில் உருவான வரலாறு இதுதான். சுமார் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம் இது.

ராஜகோபுரமின்றி காணப்படும் இத்தலத்திற்குள் நுழைந்தால் விளக்குத்தூண், பலிபீடம் காட்சி தருகின்றன. இத்தலத்தின் மூலவர் மேற்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். உள்ளே நுழைந்ததும் மகாமண்டபத்தில் கருடாழ்வார் காட்சி தருகிறார். துவாரபாலகர்கள் அமைந்திருக்கும் இடத்தில் தும்பிக்கையாழ்வாரும் நாகராஜரும் காட்சி தருகிறார்கள். அர்த்த மண்டபத்தில் தேசிகர், உடையவர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், விஷ்வக்சேனர் முதலானோர் சிலா ரூபங்களில் எழுந்தருளியுள்ளார்கள். அருகில் விகனச மகரிஷியின் சன்னிதி அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்திற்கும் கருவறைக்கும் இடையே உள்ள அந்தராளத்தில் உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீதேவி - பூதேவி சமேத கல்யாண வரதராஜர், பெருந்தேவித் தாயார், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நர்த்தனக்கண்ணன் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.

கருவறையில் வரதராஜப் பெருமாள் கல்யாண வரதராஜராக ஆறடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கல்யாணக் கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். மேல் இரு திருக்கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ் இடது திருக்கரம் ஊருஹஸ்தமாகவும், கீழ் வலது திருக்கரம் அபயஹஸ்தமாகவும் அமைய பக்தர்களுக்கு காட்சி தருகிறார். கல்யாண வரதராஜரை தரிசித்து பிரார்த்தனை செய்தால் திருமணம் விரைவில் நடைபெறுவதாக பலர் கூறுகிறார்கள்.

சுற்றுப்பிரகாரத்தின் ஒரு பக்கத்தில் அமைந்த சன்னிதியில் பெருந்தேவித் தாயார் கிழக்கு திசை நோக்கி அமைந்து அருளுகிறார். மற்றொரு புறத்தில் ஒரு தனி சன்னிதியில் ஆண்டாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ள தெருவில் சற்று தள்ளி ஆஞ்சநேயர் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.

வைணவ சம்பிரதாயத்தில் வைகானச ஆகமம் மற்றும் பாஞ்சராத்ர ஆகமம் என்ற இரண்டு வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் இத்தலத்தில் வைகானச ஆகமம் பின்பற்றப்படுகிறது. இந்த ஆகம வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் விகனச மகரிஷி. இவருக்கு இத்தலத்தில் ஒரு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

நவராத்திரி உற்சவம், அனுமன் ஜெயந்தி, ராமநவமி, புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள், வைகுண்ட ஏகாதசி முதலான பல உற்சவங்கள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகின்றன. ஆனி மாதத்தில் கருட சேவை உற்சவமும் விகனசமகரிஷிக்கு ஆடிமாதம் திருவோண நட்சத்திரத்தில் உற்சவமும் நடைபெறுகின்றன.

தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஒரு கால பூஜை நடைபெறுகிறது. பட்டாச்சார்யாரின் வீடு அருகிலேயே உள்ளது.

செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆத்தூர் என்ற ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.

-ஆர்.வி.பதி, செங்கல்பட்டு.

Tags:    

Similar News