கோவில்கள்

அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோவில்

Published On 2022-09-29 01:41 GMT   |   Update On 2022-09-29 01:41 GMT
  • இறைவன் கருவறையில் புஜங்க சயனத்தில் உள்ளார்.
  • தாயார் கமலவல்லி அமர்ந்த கோலத்தில் காட்சி.

மூலவர் பெயர் - அப்பக்குடத்தான், அப்பால ரெங்கநாதன்

உலாப் படிமம் பெயர் - அப்பக்குடத்தான்

தாயார் / அம்மன் பெயர் - இந்திரா தேவி, கமலவல்லி

தலமரம் - புரசை

மாவட்டம் - தஞ்சாவூர்

திருவிழாக்கள் - பங்குனி உத்திரம் தேர், தீர்த்தவாரி, வைகுண்ட ஏகாதசி, உறியடி உற்சவம்

அப்பக்குடத்தான் கோயிலில் சோழர், பாண்டியர், விஜயநகரர் போன்ற அரச மரபினர் ஆட்சிக்காலங்களில் பலரும் அளித்த கொடைகள் பற்றி கூறும் கல்வெட்டுகள் பல இடம் பெற்றுள்ளன. அவை அப்பாலரங்கனை 'திருப்பேர் நகரான்' என்றும், தாயாரை 'திருப்பேர் நகரான் நாச்சியார் பரிமளவில்லியார்' என்றும் குறிப்பிடுகின்றன.

விஜயநகர அரசு கால கல்வெட்டொன்றில் பரிமளவில்லியார்க்கும் செல்வருக்கும் (பெருமாளுக்கும்) சந்தி பூஜைகளுக்காக இரண்டு தூப பாத்திரம், செப்புக்குடம், மணி, திபஸஹஸ்ரதாரை, திருவந்திக்காப்புக் குடம், திருகுத்துவிளக்கு, படிக்கம், பஞ்சபாத்திரம், பாத்திர வேதிகை, தளிகை சமர்ப்பனை போன்ற பூஜா பாத்திரங்கள் அளித்தமையை பட்டியலிட்டு கூறுகின்றது. சோழர் கல்வெட்டுகளில் திருச்சடை முடி எனும் அருகிலுள்ள ஊரும், பிற்கால கல்வெட்டு ஒன்றில் வளம் பக்குடி குமார தேவராயன் என்பான் கடம்பங்குடி என்ற ஊரையும் திருப்பேர் நகரனான பள்ளிகொண்ட பெருமாளுக்கு திருவிடையாட்டமாக அளிக்கப் பெற்றமையை விவரிக்கின்றன.

விக்கிரம சோழ தேவர் கல்வெட்டொன்றில் காலம் பொல்லாததாய் ஊர் அழிந்து குடிமக்கள் எல்லாம் ஊரைவிட்டு ஓடிப்போன ஒரு சோதனையான காலத்திற்குப் பின்பு வாசுதேவன் ஸ்ரீதரபட்டன் என்பவர் முயற்சியால் மீண்டும் ஊர் மீட்சி பெற்றதும், சிவாலயத்திற்கும், வைணவ ஆலயத்திற்கும் அவர் செய்த அருந்தொண்டுகள் பற்றியும் எடுத்துரைக்கின்றது.

இறைவன் கருவறையில் புஜங்க சயனத்தில் உள்ளார். தாயார் கமலவல்லி அமர்ந்த கோலத்தில் காட்சி. உற்சவர் செப்புத் திருமேனிகள் உள்ளன.

நம்மாழ்வாரால் பாசுரஞ் சூட்டப்பட்ட இத்தலம் திருப்பேர் நகர் என்றால் யாருக்கும் தெரியாது. கோவிலடி என்று சொன்னாலே எல்லோருக்கும் தெரியும். இயற்கையின் அரவணைப்பில் மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ள அழகான தலமாகும் இது. இத்தலம் மிகவும் தொன்மை வாய்ந்ததென்றும், ஸ்ரீரெங்கத்திற்கு முன்னதாக ஏற்பட்டதென்றும் அதனால் தான் கோயிலடி அதாவது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஆதியாக அடியெடுத்துக் கொடுத்த ஸ்தலமென்பதால் கோவிலடி என பெயர் பெற்றதாக கர்ண பரம்பரை. பஞ்ச ரங்கம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்கங்களில் இதுவும் ஒன்று.

1. ஆதிரங்கம் - ஸ்ரீரெங்கப்பட்டினம் (மைசூர்) 2. அப்பால ரெங்கம் - திருப்பேர் நகர் 3. மத்தியரங்கம் – ஸ்ரீரெங்கம் 4. சதுர்த்தரங்கம் – கும்பகோணம் 5.பஞ்சரங்கம் - இந்தளூர் (மாயவரம்) இந்த பஞ்சரங்கத்தைப் பற்றி குறிப்பிடும்போது ஸ்ரீரங்கத்தை மத்தியரங்கம் என்று சொல்லுவதால் 5 இல் மத்திமமான 3வது இடத்தை ஸ்ரீரங்கம் பெற்றது.

எனவே அப்பாலரங்கம் ஸ்ரீரங்கத்தைவிட முன்னானது என்னும் கருத்தை ஒப்பலாம். நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்களால் 33 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். நம்மாழ்வார் இப்பெருமானைப் பாடிவிட்டுத்தான் மோட்சத்திற்குச் சென்றார். நம்மாழ்வாரால் கடைசியாக மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இது தான்.

இங்கு பெருமானுக்கு தினந்தோறும் இரவில் அப்பம் அமுது செய்துப் படைக்கப்படுகிறது. அப்பம் அமுது செய்து தினந்தோறும் படைக்கப்படும் திவ்ய தேசம் இது ஒன்றுதான். ஸ்ரீரெங்க ராஜ சரிதபாணம் என்னும் நூல் இத்தலம் பற்றிய குறிப்புக்களை கொடுக்கிறது. இத்தலமும், சூழ்ந்துள்ள இயற்கைக் காட்சிகளும் திருமங்கையாழ்வாரின் பாடல்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளன. காவிரிக் கரையில் ஒரு மேட்டின் மேல் அமைந்துள்ள இக்கோவில் தொலை தூரத்தில் இருந்து பார்ப்பதற்கும், கொள்ளிட நதியில் ஒரு கோணத்தில் இருந்து பார்ப்பதற்கும் பேரழகு வாய்ந்தது.

ஆழ்வார்கள் ஒரு ஸ்தலத்தில் அனுபவிக்கும் பெருமாளை மற்றோர் ஸ்தலத்தை மங்களாசாசனம் செய்யும்போது மறக்கவொன்னா ஆற்றாமையால் மீண்டும் மங்களாசாசனம் செய்வது மரபும் வழக்கமுமாயிற்று. திருப்பேர் நகரில் வணங்கிப் போன பின்பும் அப்பக்குடத்தான் திருமங்கை மன்னனை விடாது பின் தொடர்கிறார். தம்மை விட்டு நீங்காத அந்த அர்ச்சாவதார சோதியை திருவெள்ளறை சென்று கண்டேன் என்று மீண்டும் மங்களாசாசனம் செய்கிறார்.

அமைவிடம்

அருள்மிகு அப்பக்குடத்தான் கோயில்,

திருப்பேர் நகர்,

கோயிலடி-613 105.

தஞ்சாவூர்.

தொலைபேசி - 04362-281488, 281304

Tags:    

Similar News