கோவில்கள்

ஆழிமலை சிவன் கோவில் வரலாறும்... 58 அடி உயர 'கங்காதேஸ்வரர்' சிலையும்...

Published On 2023-07-23 07:25 GMT   |   Update On 2023-07-23 07:25 GMT
  • இந்த சிவபெருமானுக்கு ‘கங்காதேஸ்வரர்’ என்று பெயர்.
  • தனது இடது கரத்தில் மிகப்பெரிய சூலாயுதத்தை தாங்கியிருக்கிறார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் கடற் கரையில் அமைந்திருக்கிறது, ஆழிமலை சிவன் கோவில். இந்தக் கோவிலின் பின்புறத்தில், கடற்கரையை ஒட்டி பிரமாண்டமான சிவபெருமான் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இது கான்கிரீட் சிலையாகும். கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி, தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் நடைபெற்று, 2020-ம் ஆண்டு இறுதியில் நிறைவுபெற்றது. இந்தச் சிலையை வடிக்கும் பணியை, திருவனந்தபுரம் நுண்கலைக் கல்லூரியில் படித்த பட்டதாரி மாணவரான பி.எஸ்.தேவதத்தன் என்பவர் செய்தார்.

இந்த சிவபெருமான் சிலை, வழக்கமான சிவன் சிலைபோல் அல்லாமல், வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறிய பாறையின் மீது அமர்ந்த கோலத்தில் வடிக்கப்பட்டிருக்கும் இந்த சிலையில், சிவபெருமான் ஒரு காலை தரையில் ஊன்றியும், மற்றொரு காலை சம்மனம் போட்ட நிலையிலும் வைத்திருக்கிறார். தனது இடது கரத்தில் மிகப்பெரிய சூலாயுதத்தை தாங்கியிருக்கிறார். வலது கரத்தை தனது வலது தொடையில் வைத்தபடி இருக்கிறார்.

பொதுவாக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட பல சிவன் சிலைகளும், நேருக்கு நேராக தன்னை வழிபட வரும் பக்தர்களை நோக்கியபடியே இருக்கும். ஆனால் இந்த சிலை வாயிலாக அருளும் சிவபெருமான், தன்னுடைய தலையை இடதுபுறமாக திருப்பி, வானத்தை நோக்கிய நிலையில் காட்சி தருகிறார். மேலும் அவரது தலையில் இருக்கும் சடைமுடியானது, அவிழ்ந்த நிலையில் அதனுள் இருக்கும் கங்கைதேவி வெளிப்பட்ட நிலையில் இருக்கிறார். இதனால் இந்த சிவபெருமானுக்கு 'கங்காதேஸ்வரர்' என்று பெயர்.

கடற்கரையில் இருந்து 20 அடி உயரத்தில் உள்ள பாறையின் மீது, 58 அடி உயரத்தில் அமைந்த இந்த சிவன் சிலையை உருவாக்கத் தொடங்கியபோது, தேவதத்தனுக்கு 23 வயதுதான். தற்போது 30 வயதைக் கடந்திருக்கும் தேவதத்தன் இந்த சிலையைப் பற்றி சில விஷயங்களை சமூக வலைதளங்களிலும், சில பேட்டிகளிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதில் அவர், "இந்தப் பணி என்னிடம் வந்தபோது, என்னுடைய சிறு வயதின் காரணமாக பலருக்கும் என்மீது நம்பிக்கை இல்லை. ஆனால் என்னுடைய பணியின் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருந்தது.

கடற்கரை ஓரத்தில் சிலையை உருவாக்கும்போது, கொந்தளிப்பான கடல், கடற்கரை காற்றின் தன்மை ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு எனக்கு உதவியாக இருந்தவர்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள். தற்போது சிலை முழுமையாக முடிந்து, அதனைக் காண சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வரும்போது, நான் பட்ட கஷ்டங்கள், அனைத்தும் மகிழ்ச்சியாக முன் வந்து நிற்கிறது" என்கிறார்.

Tags:    

Similar News