ஆன்மிகம்
பேரூர் பட்டீசுவரர் கோவில்- கோயம்புத்தூர்

பேரூர் பட்டீசுவரர் கோவில்- கோயம்புத்தூர்

Published On 2021-01-23 06:12 GMT   |   Update On 2021-01-23 06:12 GMT
பட்டீசுவரர் கோவில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூரில் அமைந்து இருக்கும் ஒரு இந்து சைவ சமய கோவில் ஆகும்.
கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து "பேரூர் " என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம். நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம், மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு "நடராஜப்பெருமான்" ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு....

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற இக்கோவில் கோவை மாநகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது.

இக்கோவில் கரிகால சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார். இங்கிருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது. தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக இத்திருக்கோவிலின் தூண்கள் அமைந்துள்ளன. இவற்றை பக்தர்கள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.

இத்திருக்கோவிலின் புராதனப் பெயர் பிப்பலாரண்யம் (பிப்பலம் = அரச மரம்; ஆரண்யம் = காடு).மேலும், காமதேனுபுரி, பட்டிபுரி,ஆதிபுரி, தட்சிண கயிலாயம், தவசித்திபுரம், ஞானபுரம், சுகலமாபுரம், கல்யாணபுரம், பிறவா நெறித்தலம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம் போன்ற மற்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.

வரலாறு

இக்கோவில் கரிகால் சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இக்கோவிலுக்கு வருகை புரிந்து தேவாரப் பாடல்கள் பாடியிருக்கிறார். பிற்காலத்தில் சோழ பேரரசன் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் இக்கோவிலில் அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு, கோவிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு நன்கொடைகள் அங்குள்ள சுவர்களில் ஆவணப்படுத்தப்பட்டன. பின்னர் பதினேழாம் நூற்றாண்டு வரை கொங்கு சோழர்கள், போசளப் பேரரசு, விஜயநகரப் பேரரசு மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியின் கீழ் பல்வேறு நன்கொடைகள் இக்கோவிலுக்கு அளிக்கப்பட்டு வந்துள்ளன.

இக்கோவிலின் கனக சபை பதினேழாம் நூற்றாண்டில் அழகாத்ரி நாயக்கரால் கட்டப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் 63 நாயன்மார்களைக் கொண்ட மண்டபம் கட்டப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் கல்யாண மண்டபம் மற்றும் முன் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு விமானமும் செப்பனிடப்பட்டது.

பெயர் காரணம்

ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத் தொழிலினிடையே சோர்வுற்றுக் கண்ணயர்ந்து விட்டார். இதை அறிந்த திருமால் காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத்தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டார். அதன்படி காமதேனுவும் இமயமலையில் அருந்தவமிருந்ததராம். ஆனால் சிவபெருமான் அருள் சித்திக்கவில்லை.

அச்சமயம் நாரத முனிவர் தஷிணகைலாயம் பற்றிச்சொல்ல, காமதேனுவும் கன்றுடன் அந்த இடத்தை அடைந்தது. அங்கே ஆதிலிங்க மூர்த்தியாகக் காஞ்சி நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலபிஷேகம் செய்து தவமிருந்தது. ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி, அந்த ஆதிலிங்க மூர்த்தியின் மேல் கவிந்திருந்த புற்றை விளையாட்டாய்க் குலைத்து விட்டது. கன்றின் குளம்படி சிவபெருமானின் திருமுடியில் அழுந்தப் பதிந்து விட்டது.

பதறிப்போன காமதேனுவின் வருத்தத்தைப் போக்கும் விதமாக, சிவபொருமான் தோன்றினார். “பார்வதி தேவியின் வளைத் தழும்மை என் மார்பகத்தில் ஏற்றது போல் உன் கன்றின் குளம்படித் தழும்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்று ஆறுதல் கூறினார். “இது முக்தி தலம் என்பதால், நீ வேண்டும் சிருஷ்டி ரகசியத்தை இங்கே அருள முடியாது. அதை திருக்கருவூரிலே அருளுகிறேன். இங்கே நீ தொடர்ந்து தவமிருந்து எனது நடன தரிசனத்தைக் காணலாம். உன் நினைவாக இத்தலம் பட்டிபுரம் காமதேனுபுரம் என்று வழங்கப்படட்டும். எனக்கு பட்டிநாதர் என்ற ஒரு திருப்பெயரும் இவ்வூரில் வழங்கட்டும்” என்று அருளினார்.

இந்த புராணத்தை மெய்ப்பிக்கும் வகையில் சிவலிங்கத்தின் திருமுடியில் குளம்படித் தழும்பை இன்றும் காணலாம். இந்நிகழ்வின் காரணமாக இக்கோவிலில் இருக்கும் இறைவன் பட்டீசுவரர் என்றே அழைக்கப்படுகிறார்.

பாடல் பெற்ற தலம்

இத்தலம் தேவாரம் போன்ற சமய இலக்கியங்களிலும் பல வரலாற்று இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அருணகிரிநாதரால் பாடப்பட்ட திருப்புகழ் மூலமாக இத்தலத்தை பற்றிய ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய தகவல் கிடைக்கின்றன. சோழர்களின் பூர்வ பட்டையம் இவ்வாலயத்தின் வரலாற்றையும் இத்தலத்தில் வாழ்ந்த மக்களை பற்றியும் தகவல்களை கொண்டுள்ளது. இக்கோவிலுள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகளில் இருந்து ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த வழக்கங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

சிறப்பு

இக்கோவிலில் பல்வேறு கோபுரங்களும் மண்டபங்களும் உள்ளன. இக்கோவிலின் மண்டபம் ஒன்றில் செய்யப்பட்ட நடராஜர் சிலை உள்ளது. அம்மண்டபத்தின் தூண்களில் அழகிய சிற்பங்களும் அதன் மேற்கூரையில் கல்லால் ஆன சங்கிலியும் அமைந்துள்ளன.

இக்கோவிலில் பட்டி விநாயகர் சன்னிதியும், அரச மரத்தடியில் அரசம்பலவாணர் (சிவபெருமான்) சன்னிதியும் அமைந்துள்ளன. அந்த அரச மரத்தின் அடியில் சிவபெருமான் தாண்டவமாடியதாக நம்பப்படுகிறது. இக்கோவில் பிறவாப்புளி (புளியமரம்) மற்றும் இறவாப்பனை (பனைமரம்) ஆகியவற்றை தல விருட்சமாகக் கொண்டுள்ளது.

வழிபாட்டு நேரம்

இத்திருக்கோவிலை அனைத்து நாட்களிலும் வழிபடலாம்.

காலை : 05:30 முதல் 01:00 வரை

மாலை : 04:00 முதல் 09:00 வரை
Tags:    

Similar News