ஆன்மிகம்
தத்தாத்ரேயர்

தத்தாத்ரேயர் வழிபாட்டு தலங்கள்

Published On 2021-01-06 06:04 GMT   |   Update On 2021-01-06 06:04 GMT
தத்தாத்ரேயர், பிரம்மன், திருமால், சிவன் மூவரையும் உள்ளடக்கிய இந்துக் கடவுள் ஆவார். தத்தாத்ரேயர் வழிபாட்டு தலங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இமயமலையில் ஆத்ரேய மலைப்பகுதியில் உள்ள குகைஒன்றில், தத்தாத்ரேயர் பல ஆண்டுகள் தங்கி தவமியற்றியதாக கூறப்படுகிறது. எனவே அந்தக் குகை `தத்தர் குகை’ என்று அழைக்கப்படுகிறது.

வடக்கே ஜூனகாட் செல்லும் வழியில் உள்ளது, கிர்நார் மலை. இந்த மலையின் உச்சியில் தத்தாத்ரேயர் சரண பாதுகை அமைந்துள்ளது. இந்த இடத்தை அடைவதற்கு மலையின் மீது 10 ஆயிரம் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தானில் உள்ள மிகப் பெரிய மலை உச்சி ஒன்றில் (கடல் மட்டத்திலிருந்து 5650 அடி உயரம்) தத்தாத்ரேயர் ஆலயம் இருக்கிறது. இங்குள்ள சன்னிதியின் உயரம் மொத்தமே இரண்டு அடிதான். அதனுள் மூன்று முக தத்தாத்ரேயர் சிலையும், அவரது பாதச்சுவடுகளும் உள்ளன.

தத்தாத்ரேயர் ஸஹ்ய மலையில் வெகுகாலம் தவமிருந்தார். அதுவே `தத்தஷேத்திரம்’ என்றும், தற்போது `மகாபலேஷ்வர்’ என்றும் விளங்கி வருகிறது.

குல்பர்காவுக்கு அருகே காங்காப்பூரில் மூன்று முகமுடைய தத்தாத்ரேயர் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவரை இங்குள்ள ஜன்னல் கதவைத் திறந்துதான் தரிசனம் செய்ய வேண்டும்.

மராட்டியத்தில் கிருஷ்ணா நதி தீரத்தில் அமைந்திருக்கும் நரசிம்ம வாடியில், தத்தாத்ரேயர் சன்னிதி உள்ளது. இங்குள்ள பாதுகைகளை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் குருமூர்த்தி என்று கூறுவது, தத்தாத்ரேயரையே குறிக்கும். அங்கு தத்தகுரு ஆராதனை அதிக அளவில் உள்ளது.

ஆந்திராவில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஔதும்பரம் என்ற இடம் தத்தஷேத்திரமாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் தத்தகிரி குகாலயம் என்ற இடத்தில் தத்தாத்ரேயர் சிலை வடிவம் காணப்படுகிறது.

குடவாசல் எனும் புதுக்குடியில் தத்தகுடீரம் உள்ளது. இங்குள்ள தத்தர் ஆலயத்தில் தத்த பாதுகை, கார்த்தவீர்யார்ஜூன் சக்கரம் ஆகிய இரண்டிற்கும் தினந்தோறும் பூஜை நடைபெற்று வருகிறது.

உடையார்பட்டி என்ற இடத்தில் 16 அடி உயரத்தில் மிக எழில் வாய்ந்த தத்தாத்ரேயரின் சிலை உருவம் உள்ளது. இது `கந்தகிரி விஸ்வ ரூப தத்தர்’ என அழைக்கப்படுகிறது.

சுசீந்தரம் தாணுமாலயன் திருக்கோவில் தாணு, அயன், மால் - அதாவது சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் ஓர் உருவாக வீற்றிருக்கும் தலமாகும். இது ஒரு முக்கியமான தத்த ஷேத்திரமாகும்.
Tags:    

Similar News