முக்கிய விரதங்கள்

வைகாசி விசாகம்: இன்று முருகனை விரதம் இருந்து வழிபட உகந்த நாள்

Published On 2023-06-02 01:54 GMT   |   Update On 2023-06-02 01:54 GMT
  • வைகாசி விசாகம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • மாம்பழத்தை வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்

வெஞ்சுமரில் அஞ்சேலென வேல் தோன்றும்-நெஞ்சில்

ஒருகால் நினைக்க இருகாலும் தோன்றும்

முருகா என்றோதுவோர் முன்.

-திருமுறை

ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய தெய்வத்தை கொண்டாடினால் சிறப்பான வாழ்க்கை அமையும். அந்த அடிப்படையில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், கார்த்திகை திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசி மகம் போன்றவைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுது தான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது.

வரங்களைக் கொடுக்கும் கரங்கள் பனி ரெண்டைக் கொண்டவன் வடிவேலன். எனவே அவனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும். இந்த ஆண்டு வைகாசி விசாகம் இன்று (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.

வைகாசி விசாகம் தினத்தன்று விரதம் இருந்து தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை மனம் உருக வழிபட்டால் பகை விலகும். பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம், குடை, மோர், பாகனம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜை அறையில் முருகப் பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணெய் ஊற்றி, ஐந்து வித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான சுந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும். 'ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்' என்பதற்கிணங்க, மயிலில் பறந்து வந்து மால்மருகன் வரம் தருவான்.

சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து அவதரித்தவர் முருகன். சக்தி பார்வதிதேவி சேர்த்தெடுத்து ஞானப்பாலூட்டி வளர்த்த சக்திமைந்தன் தான் முருகன். இவர் விநாயகப்பெருமானின் இளைய சகோதரன், ஐயப்ப சுவாமியின் அண்ணன்.

திருமாலின் மருமகன், இந்திரனின் மாப்பிள்ளை, தேவயானை எனும் தேவியின் கணவன். வள்ளிக்குற மகளின் காதலன், வீரபாகு முதலான நவ வீர வாகுத்தேவர்கள் 9 பேரின் தோழன், தேவர்களுக்கு இன்னல்கள் விளைத்த தாரகாசூரன் சிங்கமுகன் சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்தவன்.

அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன், அவ்வைப்பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன். நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர், கச்சியப்ப சிவசாரியார் போன்ற ஞானிகளுக்கே தமிழ் நூல்கள் எழுத போதித்த சற்குரு.

அப்பனுக்கே ஞானம் சொன்ன சுப்பன். தமிழகத்திற்கும் தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் உண்மையான தமிழ்த்தலைவன், வடக்கே பிறந்து தெற்கே வந்தாலும் முற்றிலும் செந்தமிழ் நாட்டிற்கே உரியவன்.

சித்தர்கள் பரம்பரையை துவக்கி வைத்த பெருமை முருகனுக்கு உண்டு. முருகப்பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

முருகனை மந்திரவடிவிலும், யந்திர வடிவிலும், யாக நெருப்பிலும், பற்பல சிற்ப வடிவிலும், ஓவிய வடிவிலும், தமிழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள். முருகப்பெருமானைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டுமானால் கச்சியப்பரின் கந்தபுராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, அருணகிரியாரின் திருப்புகழ், குமரகுருபரரின் கந்தர்கலிவெண்பா முதலான படைப்புகளை சலிப்பே இல்லாமல் படித்து, அதை நுணுக்கமாக ஆராய வேண்டும்.

விசாகம் தினமான இன்று செய்யுங்கள். முருகன் அருள் நிரம்ப கிடைக்கும்.

Tags:    

Similar News