முக்கிய விரதங்கள்

ஆடி வெள்ளி விரதம்: இன்று சுமங்கலிகளுக்கு மங்களப் பொருட்களை கொடுத்தால்...

Published On 2023-07-21 02:41 GMT   |   Update On 2023-07-21 02:41 GMT
  • இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை.
  • பிரிந்த தம்பதியை ஒன்று சேர்த்து வைப்பாள்.

ஆடி மாதம் என்பது சக்திக்கு உரிய வழிபாடு. இந்த மாதத்தில் உலகெங்கும் மகாசக்தியின் அளப்பரிய சக்தியானது வியாபித்திருக்கும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் மகத்துவம் நிறைந்த நாட்களாகும்.

இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. இன்று விரதம் இருந்து அம்மனை ஆராதிக்க வேண்டும். காலையில் ஆலயத்துக்கு சென்று ஐந்துமுக திரி வைத்து விளக்கு ஏற்றுங்கள். நெய்விளக்கேற்றுவது மிக, மிக நல்லது. அம்மனுக்கு வேண்டிக் கொண்டவர்கள் அல்லது நினைத்தது நடக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இன்று மாவிளக்கு போடுங்கள்.

அம்பாளுக்கு மிகவும் பிடித்தது செந்நிற மலர்கள்தான். எனவே சிவப்பு நிறத்தில் மலர்களை வாங்கி சாத்துங்கள். குடும்பமாக எல்லோரும் அமர்ந்து, பூஜித்து வணங்குங்கள்.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மன் வழிபாடு செய்து சுமங்கலிகளுக்கு புடவை, ஜாக்கெட் முதலான மங்களப் பொருட்களும் சேர்த்துக் கொடுப்பது நல்லது. கணவரின் ஆயுள் பெருகும். தடைப்பட்ட மங்கள சுபகாரியங்கள் அனைத்தும் தங்கு தடை இல்லாமல் விரைவில் கை கூடி வரும்.

ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கி நமஸ்கரிப்பதும் ஆசீர்வதிப்பதும் சிறப்பு வாய்ந்தது.

வீட்டில் வறுமை நிலை மாறி, சகல செல்வங்களும் பெருகும். லலிதா சகஸ்ர நாம பாராயணம், கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். பால் பாயாசம், கேசரி, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து, அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு வழங்குங்கள். இன்று முதல் வெள்ளிக்கிழமை இவற்றையெல்லாம் கடை பிடித்தால் ஆன்மிக ஞானம் அதிகரிக்கும்.

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான இன்று மறக்காமல், அம்பாளை, அன்னையை, மகாசக்தியை, உலகாளும் நாயகியை ஆத்மார்த்தமாக வணங்குங்கள். இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியேற்றுவாள். பிரிந்த தம்பதியை ஒன்று சேர்த்து வைப்பாள். இதுவரை வீட்டில் இல்லாமல் இருந்த ஒற்றுமையை பலப்படுத்திக் கொடுப்பாள்.

Tags:    

Similar News