முக்கிய விரதங்கள்

ஆடி மாத விரத வழிபாடுகள், பலன்கள்

Published On 2023-07-24 04:31 GMT   |   Update On 2023-07-24 04:31 GMT
  • ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும்.
  • ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும்.

ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது.

இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும். ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்தது என்றாலும், குறிப்பாக மாரியம்மன் வழிபாடு இன்னும் சிறப்பாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.

ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது. புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் நிலாச் சோறு சாப்பிடுவார்கள்.

அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம். திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.

தமிழர்களுக்கு, ஆடி மாதம் வந்தாலே பண்டிகைகளின் அணிவகுப்பு ஆரம்பமாகி விடும். ஆடி மாதப் பிறப்பு முதல், தை மாதம் பொங்கல் வரை பலவித வழிபாடுகளிலும், கொண்டாட்டங்களிலும் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.

ஆடி மாதத்தை பல தெய்வங்களுடன் தொடர்புபடுத்தி நம் முன்னோர்கள் பல விரதங்களை மேற்கொண்டு வழிபட்டு வந்தனர்.

ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய தட்சிணாயனம். இது தேவர்களுக்கு இரவாகும். தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உத்தராயணம் காலமாகும். இது தேவர்களுக்கு பகலாகும்.

அதாவது ஆடிமாதமே, தேவர்களின் மாலைக்காலம் (6 மணி முதல்– 8 மணி வரை) இந்த மாலை நேரத்தில் அனைத்து உயிருக்கும் அன்னையான அம்பிகையைத் துதித்து, அவள் அருளை வேண்டுதல் வேண்டும். ஆடி மாதத்தில் தான் பூமாதேவி அவதரித்தாள். பூமியில் வாழும் நமக்கு, மழை இல்லா விட்டால் எதுவும் நடக்காது! மழையே நீ பொழிவாய்!" என்று வேண்டுதல் செய்ய வேண்டும்.

உலகிற்கெல்லாம் தாயான அன்னை பராசக்திக்கு எம்மைக் காத்திட வேண்டி அவள் அருள் பெற ஆடி மாதம் பிறந்ததும் கூழ் காய்ச்சி கொழுக்கட்டை பிடித்து அவித்து அம்மனுக்கு படைப்பார்கள்.

காற்றாலும் வெப்பத்தாலும் ஏற்படும் நோய்களை குணப்படுத்த அந்த முத்துமாரி அம்மன் மனது வைக்க வேண்டும் என்று வேண்டுதல் பண்ணுவர். வேப்பிலை மாலை சாற்றுதலும் எலுமிச்சைக்கனி மாலை சாற்றி வெப்பு நோய் தீர்க்க வழிபடுவதும் கால காலமாய் நடைபெற்று வரும் வழக்கமாகும்.

எலுமிச்சைசாறு, கரும்பு, இளநீர், பால், தயிர், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து அம்மனை குளிரச்செய்வர். பட்டுப்பாவாடை உடுத்தி பூமாலை சூட்டி அழகுபடுத்துவர். அம்மனுக்கு பிடித்தது வேப்பிலை. மாலை அதை அழகுற அணிவித்து அழகாக்குவர்.

தயிர்சாதம், எலுமிச்சைசாதம், கூழ் கஞ்சி போன்றவைகளை படையல் இட்டு அன்னபூரணி எமக்கு என்றும் குறைவில்லாத வாழ்வை வளமுடன் தந்திட நிவேதனம் செய்து பழங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றையும் சேர்த்து படைத்து தூபம் தீபம் காட்டி பூச்சொரிந்து பூமலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.

Tags:    

Similar News