ஆன்மிகம்

சகல சவுபாக்கியங்களை தரும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்கும் முறை

Published On 2018-12-18 05:01 GMT   |   Update On 2018-12-18 05:01 GMT
வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.
* ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்.

* ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜை செய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

* ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம். ஏழுமுறை துளசி இலையை சாப்பிடலாம். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும். பட்டினி கிடப்பதினால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.

* இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா,டிவி பார்க்க கூடாது.

* ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது. துவாதசி அன்று அதி காலையில் உணவு அருந்துவதை பாரணை என அழைக்கிறோம். துவாதசியன்று அதி காலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா... என மூன்று முறை_கூறி வாழை இலையில் உணவுவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய் பச்சடி வறுத்த சுண்டைக்காய் சாம்பார் ஆகியவை முக்கியமானவை.

* துவாதசியன்று பஞ்சாங்கத்தில் காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும்.

* உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.
Tags:    

Similar News