ஆன்மிகம்
தசரா திருவிழாவையொட்டி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் விரதம் தொடங்கிய பக்தர்களை படத்தில் காணலாம்.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

Published On 2018-08-14 03:09 GMT   |   Update On 2018-08-14 03:09 GMT
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் தசரா திருவிழாவை முன்னிட்டு, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவின் சிகர நாளான அக்டோபர் மாதம் 19-ந்தேதி இரவு 12 மணிக்கு மகி‌ஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

தசரா திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு ஊர்களிலும் விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று கோவிலுக்கு வந்து விரதத்தை தொடங்கினர். முன்னதாக பக்தர்கள் செவ்வாடை அணிந்து, கடலில் புனித நீராடினர்.

பின்னர் பக்தர்கள் கோவிலில் சென்று வழிபட்ட னர். அம்மன் பாதத்தில் வைத்த துளசிமாலையை கோவில் அர்ச்சகர் பக்தர்களுக்கு அணிவித்தார்.

விரதம் தொடங்கிய பக்தர்கள் தங்களது ஊர்களில் உள்ள கோவில்களின் அருகில் குடில் அமைத்து, அதில் தங்கியிருந்து அம்மனை வழிபடுவார்கள். அவர்கள் தினமும் ஒரு வேளை மட்டும் பச்சரிசி உணவு சாப்பிட்டு விரதம் இருப்பார்கள்.

பின்னர், குலசேகரன்பட்டினம் வந்து முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்தில், விரதம் இருக்கும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள். கொடியேற்றம் நடந்ததும், விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோவில் அர்ச்சகர் காப்பு அணிவிப்பார்.

காப்பு கட்டிய பக்தர்கள் நேர்த்திக்கடனாக சிவன், பார்வதி, காளி, விநாயகர், முருகர், ராமர், லட்சுமணர், அனுமார், முனிவர், குறவன், குறத்தி, போலீஸ், நர்ஸ், சிங்கம், புலி, கரடி போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்து, அதனை சூரசம்ஹார நாளில் கோவிலில் வழங்கி வழிபடுவார்கள். 
Tags:    

Similar News