ஆன்மிகம்

பிரார்த்தனைகள் செய்வோம்

Published On 2019-05-31 03:55 GMT   |   Update On 2019-05-31 03:55 GMT
நமது தேவைகளை நிறைவேற்றக்கூடிய வல்லமை கொண்டவன் இறைவன் மட்டுமே. எனவே எதையும் இறைவனிடமே கேட்போம். அவனருளைப்பெறுவோம்.
புனிதமான இந்த ரமலானில் நாம் செய்யக்கூடிய நன்மையான அமல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை அறிந்து கொண்டு செய்தால் இறைவனின் நற்கூலியைப்பெறலாம். நரகத்தை விட்டும் பாதுகாப்பும் பெறலாம். நாம் செய்யவேண்டிய அமல்களில் குறிப்பிடத்தக்கது தொழுகை, கடமையான ஐந்து நேரத் தொழுகைகளை குறித்த நரத்தில் இமாம் ஜமாத்துடன் சேர்ந்து தொழுவது சிறப்பு மிக்கது. இதுகுறித்து திருமறை இவ்வாறு குறிப்பிடுகிறது:

மேலும் பொறுமையை கொண்டும், தொழுகையைக்கொண்டும (அல்லஹ்விடம்) உதவி தேடுங்கள் (திருக்குர்ஆன்2:45)

நம்பிக்கை கொண்டோரே பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான் (திருக்குர்ஆன் 2:153)

தொழுகையை நிலைநாட்டுவதுடன் திருக்குர்ஆனையும் ஓதிவர வேண்டும். குறிப்பாக திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட இந்த ரமலான் மாதத்தில் அதை அதிகமாக ஓதிவர வேண்டும். ஏன்என்றால் மறுமைநாளில் நமக்கு சொர்க்கத்தை பரிந்துரை செய்யும் வல்லமை கொண்டது திருக்குர்ஆன்.

திருக்குர்ஆனை முறையாக ஓதி வந்தவர் மறுமைநாளில் இறைவனை சந்திக்கும் போது அவருக்காக அவர் ஓதிய திருக்குர்ஆன் சிபாரிசு செய்யும். இறைவா இந்த மனிதன் திருக்குர்ஆனை ஓதிக்கொண்டே இருந்தான். இரவில் தூக்கத்தை விட்டும் விலகி இருந்து இவன் திருக்குர்ஆன் ஓதினான். எனவே இவனுக்கு சொர்க்கத்தை அளிப்பாயாக என்று திருக்குர்ஆன் தனது சிபாரிசை தெரிவிக்கும். இது தவிர சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தை அடையும் இந்த திருக்குர்ஆன் வழிகாட்டும்.

ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய) தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைக் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது என்று திருக்குர்ஆன்(2:185) குறிப்பிடுகிறது.

நமக்கு எது தேவை என்றாலும் இறைவனையே அழைக்க வேண்டும், இறைவனிடமே கேட்க வேண்டும்.

இது குறித்து திருக்குர்ஆன் (2:186) இவ்வாறு குறிப்பிடுகிறது:

(நபியே) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றிக்கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன். ஆதலாம் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும்(அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்.

மற்றொரு வசனத்தில் நிச்சயமாக நாம்தான் மனிதனை (முதன் முதலாகவும்) படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் எண்ணத்தையும் நாம் அறிவோம். பிடரியிலுள்ள ரத்த நரம்பை விட நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம் எனும் இறைவன் குறிப்பிடுகின்றான் ( திருக்குர்ஆன் 50:16)

நமது தேவைகளை நிறைவேற்றக்கூடிய வல்லமை கொண்டவன் இறைவன் மட்டுமே. எனவே எதையும் இறைவனிடமே கேட்போம். அவனருளைப்பெறுவோம்.

வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை. 
Tags:    

Similar News